சீனாவில் காட்டுத் தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் வுகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் செத்து மடிந்தனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த சீனாவும் முடக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது இந்த கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனா அந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
இதனால் நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சீன மக்கள் முழுமையாக மீண்டு வருவதற்குள் அங்கு காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிச்சுவான் மாகாணத்தின் லியாங்சன் பிராந்தியத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தீ வேகமாக பரவியது. பல ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து, தீ பரவிய காட்டு பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 2 ஆயிரம் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
விடிய விடிய இந்த பணிகள் தொடர்ந்த நிலையில் நேற்று அதிகாலை காற்றின் திசை திடீரென மாறியதால் தீயணைப்பு வீரர்கள் இருந்த பகுதிக்கு காட்டுத் தீ பரவி நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது.
இதனால் தீயணைப்பு வீரர்கள் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். சக வீரர்கள் அவர்களை மீட்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கினர்.
ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. தீயின் கோரப்பிடியில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். எனினும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதே லியாங்சன் பிராந்தியத்தில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டதும், அதில் 30 தீயணைப்பு வீரர்கள் பலியானதும் நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment