இரணைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 172 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

இரணைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 172 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் அரசின் நடவடிக்கையின் அமைவாக கிளிநொச்சி இரணைமடு விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 172 யாத்திரிகள் நேற்று (04) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்றுக் காலை இரணைமடு விமானப்படை முகாமில் விமானப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்தியாவுக்கு யாத்திரிகளாக சென்று நாடு திரும்பிய 171 பேரும், அபுதாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவருமாக 172 பேர் கடந்த 21-.03-.2020 இரணைமடு விமானப் படை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 127 பெண்களும், 45 ஆண்களும் ஆவர். அனைவரும் சிங்கள மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற நிலையில் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நாட்டின் பல பாகங்களிலும் 41 பொலீஸ் நிலைய பிரிவுகளைச் சேர்ந்த இவர்கள் ஏழு விசேட பஸ்களில் விமானப்படை மற்றும் பொலீஸாரின் பாதுகாப்புடன் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தாங்கள் இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் எவ்வித மனவருத்தமோ கவலையோ இல்லை எனவும், நாட்டையும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு கருதி அரசின் இந்நடவடிக்கையை நாம் முழுமனதோடு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த பொதுமக்கள் தனிமைப்படுத்தலை கௌரவக் குறைவாகவோ, அல்லது குற்ற உணர்ச்சியோடு நோக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களை விமானப்படையினர் மிகவும் அக்கறையோடு பாராமரித்தார்கள், அவர்களுக்கு தாங்கள் மிகுந்த நன்றியை தெரிவிப்பதாகவும் இந்த மக்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

No comments:

Post a Comment