தனியார் வைத்தியசாலைகளின் உதவியுடன் நாளொன்றுக்கு 1,000 இற்கும் அதிகமான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

தனியார் வைத்தியசாலைகளின் உதவியுடன் நாளொன்றுக்கு 1,000 இற்கும் அதிகமான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கின்றமை காரணமாக, அதற்கான PCR பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இந்த PCR பரிசோதனை நடவடிக்கைகளை தனியார் வைத்தியசாலைகளில் காணப்படும் வசதிகளை பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தனிமைப்படுத்தல் நிலையங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் உள்ளவர்கள் உள்ளிட்ட பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களில், நாளொன்றுக்கு சுமார் 800 மாதிரிகள் அரசாங்க சுகாதார பிரிவினால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதோடு, இச்பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையாக காணப்படுகின்றது. இதன் மூலம் பெருமளவிலான நோயாளர்களை அடையாளம் காணமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே PCR பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் உதவியுடன் மேற்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று, ராஜகிரியவில் உள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இன்று (23) முற்பகல் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலைகளான, ஆசிரி, நவலோக, டேர்டன்ஸ், லங்கா ஆகிய வைத்தியசாலைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது நாளொன்றுக்கு வைத்தியசாலை ஒன்றின் மூலம் 100 மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கைகளை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்திருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளொன்றுக்கு 1,000 இற்கும் அதிகமான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பதோடு அவ்வைத்தியசாலைகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகளுக்கான உதவியை பெறுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றியிருந்தனர்.

No comments:

Post a Comment