கூலி வேலை செய்வோர், சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம், உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

கூலி வேலை செய்வோர், சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம், உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

(நா.தனுஜா) 

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலையின் காரணமாக அன்றாடக் கூலி வேலை செய்வோர், சுய தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் தலையீடு செய்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதுடன் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கிறார். 

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் காணொளிப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் நாடு என்ற வகையில் பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் இத்தருணத்தில், நாமனைவரும் ஒன்றிணைந்து, இச்சவாலை எதிர்கொள்வதன் ஊடாக இதிலிருந்து மீளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கிறது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் அனைத்து சுகாதார சேவையாளர்கள், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் கூறிக்கொள்கின்றேன். 

இன்றளவில் அன்றாடக் கூலி வேலை செய்வோர், சுய தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் அரசாங்கம் தலையீடு செய்து அனைவருக்கும் ஓர் அடிப்படை நிவாரணத்தை வழங்கி உணவையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை முன்நிறுத்திய அந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன். 

சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவைப் பொறுத்தமட்டில் ஒரு தொகுதியினருக்குத் தற்போது வழங்குவதற்கும், மற்றொரு தொகுதியினருக்குக் கொடுப்பனவைத் தாமதப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சமுர்த்திப் பயனாளிகளை இரு தொகுதியாகப் பிரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அக்கொடுப்பனவை சமுர்த்திப் பயனாளிகள் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விவசாயம், பயிர்ச் செய்கை மற்றும் மீன்பிடி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தவர்களும் தற்போதைய நெருக்கடி நிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment