மாணவர்களின் போஷாக்கு நிலையை அதிகரிக்கும் முகமாக ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வேலைத்திட்டம் தொடர்ச்சியாக பல்வேறு விதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆரம்ப காலத்தில் மதிய உணவுக்காக சகல பாடசாலை மாணவர்களுக்கும் தினமும் ஏதாவது ஒரு சத்துள்ள உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூப்பன்கள் வழங்கப்பட்டன. பின்னர் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு என தனியாக பால் உணவும் போஷாக்கும் வேறு உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது பெரும்பாலான பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு என போசாக்கு உணவு வழங்கும் திட்டம் கடந்த அரசாங்க காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுவரை அது வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது வழங்கப்படும் போசாக்கு உணவினை பாடசாலையின் பெற்றோர்களே தயாரித்து வழங்குகின்றனர்.
அதாவது பாடசாலை நிர்வாகத்தினால் ஏகமனதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பெற்றோர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வலய கல்வி காரியாலயத்தினால் வழங்கப்படும் செயற் திட்டத்திற்கு அமைவாக உணவு வகைகள் தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு மாணவனுக்கு 30 ரூபா பெறுமதியுடைய உணவினை வழங்க வேண்டும் என்பதே கல்வி அமைச்சின் திட்டமாகும். அதற்கமைய மாதாந்தம் கல்வித் திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு உரிய கொடுப்பனவு பாடசாலை நிர்வாக கணக்கில் இருந்து செலுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் 2020 ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என மாணவர்களுக்கான உணவினை தயாரிக்கும் பெற்றோர்கள் தெரிவித்தனர் .
குறிப்பாக நுவரெலியா கல்வி வலயத்தின் லிந்துலை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்குக் கொடுப்பனவு இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனால் தொடர்ந்து மாணவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக வறுமையான குடும்பங்களுக்கு இத்திட்டத்தை வழங்க வேண்டுமென அரசாங்கத்தினால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு அமையவே சகல பாடசாலைகளிலும் வறுமை நிலையைப் போக்குவதற்கும், சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக உணவு தயாரிக்கும் பணியினை சமுர்த்தி உதவி பெறக்கூடிய குடும்பங்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த இரு மாத காலமாக தமக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்காமையால் தொடர்ந்து உணவு வகைகளை தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் உணவு பொருட்களின் விலைக்கு ஏற்ப 30 ரூபாவுக்கு போசாக்கான உணவுகளை வழங்குவதிலும் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்திடம் வினவியபோது வலயக் கல்வி காரியாலயத்தில் இருந்து பணம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தங்களுக்கான கொடுப்பனவுகளை துரிதகதியில் முன்னெடுப்போம் என பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்து வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை ஏன் வழங்கப்படவில்லை என பாடசாலை அதிபர்களிடம் வினவியபோது இது சம்பந்தமாக வலயக் கல்வி பணிமனைக்கு அறிவித்துள்ள போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணவு விநியோகத்திற்கான பணம் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவ்வாறு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாயினும் பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக போசணை மிக்க உணவுகளை தினமும் தயாரித்து வழங்கி வரும் பெற்றோர்களுக்கான கொடுப்பனவுகளை துரிதகதியில் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.
தினகரன்
No comments:
Post a Comment