தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடே கட்சிகள் பிரிந்து செல்ல காரணம் - மறத் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடே கட்சிகள் பிரிந்து செல்ல காரணம் - மறத் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன்

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளே இன்று பல கட்சிகள் பிரிந்து செல்ல காரணம் என மறத் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் நா.பத்மநாதன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

நாங்கள் இம்முறை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க போவதில்லை. தமிழ் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமையளிப்போருக்கு எமது ஆதரவு வழங்கப்படும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கா விட்டாலும் கூட அபிவிருத்தி சார்ந்த செயற்றிட்டங்களை கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவில்லை.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இன்று பல கட்சிகள் பிரிந்து சென்றுள்ளன. தமிழ் மக்களின் நோக்கங்களை மறந்து தமது சொந்த நலன்களை கருத்தில்கொண்டு செயற்பட்டு இன்று பிரிந்து நிற்கின்றனர். இவ்வாறானவர்களுடன் கூட்டுச்சேர்ந்து பயணிப்பது என்பது முடியாத காரியமாகும்.

அனைத்து தமிழ் கட்சிகளும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைய வேண்டும். அனைத்து கட்சிகளும் தமக்குள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதன் மூலமே கிழக்கில் தமிழ் மக்களுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து தமிழ் தரப்புகளும் ஒன்றுபட்டு நின்று அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

(வெல்லாவெளி நிருபர்)

No comments:

Post a Comment