சிறுவர்களில் சுமார் 60 வீதமானோருக்கு புரதச்சத்து குறைபாடு - இலவச போசாக்கு வேலைத்திட்டம் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

சிறுவர்களில் சுமார் 60 வீதமானோருக்கு புரதச்சத்து குறைபாடு - இலவச போசாக்கு வேலைத்திட்டம் அறிமுகம்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர்களில் சுமார் 60 வீதமானோருக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இதற்கு தீர்வு கண்டு, சிறார்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனம் இன்னும் 10 நாட்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி அதிகளவு புரதச்சத்து அடங்கிய, பக்க விளைவுகளற்ற - முழுமையாக இயற்கையான வழிமுறையில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வாரம் மூன்று நாட்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி கூறியவை வருமாறு, "பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவராக பதவியேற்கும்போது, போசாக்கு மட்டத்தை அதிகரித்தல், மலையகத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்தல் ஆகியவையே எனது பிரதான இலக்காக இருந்தது. இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முழுமையான சுதந்திரத்தையும், பொறுப்பையும் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழங்கினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சௌபாக்கியமான எதிர்காலம்' எனும் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையின் பிரகாரம், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் எண்ணக்கருவுக்கமைய எமது நிதியத்தின் சுகாதாரப் பிரிவு பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை நடத்தியபோது, பல பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக இரும்புச்சத்து குறைப்பாடு இருப்பது கண்டறியப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இயற்கையான முறையில் அதிக இரும்புச்சத்து அடங்கிய சோயா உணவை தயாரித்து, அதனை குறைந்த விலையில் எமது மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்ட மற்றுமொரு ஆய்வில் மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் சுமார் 60 வீதமான சிறார்களுக்கு போசாக்கு குறைப்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வுகாணும் வகையில் புரதச்சத்து அதிகம் அடங்கிய 'நியூட்டரி பாரை' அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது இலவசமாகவே வழங்கப்படும். தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஊடாக இது வழங்கப்படும். கிராமப்புற குழந்தைகளும் பயன் பெறலாம்.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 'நியூட்ரி லைப்' எனும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி இன்னும் 10 நாட்களுக்குள் போதனைக் குறைப்பாட்டை தீர்க்கும் வகையிலான உணவுப்பொதி வழங்கப்படும்.

அதேவேளை, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு மட்டத்தினை அதிகரிக்கும் வேலைத்திட்டம் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

(ஹற்றன் நிருபர்)

No comments:

Post a Comment