(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்று நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கொவிட் - 19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் தொற்று உலகலாவிய ரீதியில் மிகமோசமாகப் பரவியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது.
அதேபோன்று இந்நிலைக்கு தாம் எவ்வாறு முகங்கொடுக்கிறோம் என்பது குறித்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் உள்ளடங்கலாகப் பெரும்பாலான நாடுகள் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்குத் தம்மிடம் போதியளவான சுகாதார வசதிகள் இல்லை என்று அறிவித்திருக்கின்றன.
எனவே எமது நாடு இச்சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனின், அரச மற்றும் தனியார் சுகாதாரக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி முறையான திட்டமொன்றைத் தயாரித்துக் கொள்வது இன்றியமையாததாகும்.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்தமையானது வரவேற்கத்தக்க நகர்வு என்றாலும் கூட, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment