நிருபர்களை வெளியேற்ற வேண்டாம் - சீனாவிடம் அமெரிக்க பத்திரிகைகள் வேண்டுகோள்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

நிருபர்களை வெளியேற்ற வேண்டாம் - சீனாவிடம் அமெரிக்க பத்திரிகைகள் வேண்டுகோள்!

நியூயோர்க் ரைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய பிரதான அமெரிக்க பத்திரிகைகளின் பிரசுரிப்பாளர்கள் தங்களது நிருபர்களை வெளியேற்ற வேண்டாம் என்று செவ்வாயன்று பிரசுரமான பகிரங்கக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 

இந்த மூன்று பத்திரிகை நிறுவனங்களினதும் 13 நிருபர்களை இம்மாத ஆரம்பத்தில் சீனாவை விட்டு வெளியேறுமாறு பெய்ஜிங் உத்தரவிட்டது. 

சீனாவில் பணியாற்றிய வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு எதிராக இத்தகையதொரு நடவடிக்கை முன்னர் ஒருபோதும் எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

"சீன அரசாங்கத்துக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையிலான இராஜதந்திர தகராறொன்றின் பக்கவிளைவாக பாதிக்கப்படக் கூடிய தரப்பாக ஊடகங்கள் மாறிவிட்டன. கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக முழு உலகமுமே போராடிக் கொண்டிருக்கும் ஒரு இடர்மிக்க நேரத்தில் அமெரிக்க நிருபர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். எமது செய்தி நிறுவனங்களுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை மீளப்பெறுமாறு சீன அரசாங்கத்தை நாம் வலியுறுத்திக் கேட்கின்றோம். இந்த வெளியேற்ற உத்தரவுக்கு முன்னதாக சுயாதீனமான செய்தி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போக்கும் அதிகரித்து காணப்பட்டது. அந்தப் போக்கை தளர்த்துமாறும் சீன அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம்" என்று அந்த பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சீன - அமெரிக்க அரசாங்கங்களுக்கிடையிலான இராஜதந்திர தகராறின் பக்கவிளைவாக ஊடகங்கள் பாதிக்கப்படுகின்றமை இடர்மிக்க தருணமொன்றில் முக்கியமான தகவல்களை உலகம் அறிந்து கொள்வதற்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. 

சீன அரச ஊடக அமைப்புக்களை "வெளிநாட்டு தூதரகங்கள்" என்று வகைப்படுத்துவதற்கும் அவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகளைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் எடுத்த அரசியல் நோக்கத்துடனான ஒடுக்குமுறை தீர்மானத்துக்கு பதிலடியாகவே அமெரிக்க நிருபர்களை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது என்று சீனா கூறுகிறது. 

(த கார்டியன்)

No comments:

Post a Comment