தேர்தலில் பிரதமர் மகிந்த தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

தேர்தலில் பிரதமர் மகிந்த தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர் டக்ளஸ்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகு விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகை தந்தார். இதன்போது வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவர்களுக்கும் இடையிலான சந்திப்பு துறைமுக மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றபோது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சுப் பதவியினை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கையளித்துள்ளனர். அதில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்துவதற்கும், கடற்தொழில் மக்கள் எதிர்கொள்கின்ற பிச்சனைகளை அந்த இடங்களுக்கு சென்று நேரில் ஆராய்ந்து அறிந்து தீர்வு காணும் நோக்கம்.
அத்தோடு நாட்டு மக்களுடைய போசாக்கான உணவை நியாயமான விலையில் கிடைக்க வைப்பதற்குமாக எனக்கு இந்த பொறுப்பினை வழங்கி உள்ளனர். இந்த பொறுப்பினை சரியாக செய்வேன் என்ற நம்பிக்கையில் எனக்கு தந்துள்ளனர். 

தற்போது தேர்தல் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் தங்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு எவ்வளவு தீர்வுகான முடியுமோ தெரியாது. இன்னும் ஒன்றரை மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்களது பிரச்சனை விரைவாக தீர்க்கப்படும்.

இதன் நம்பிக்கையை உங்களுக்கு வழங்கவே வந்துள்ளேன். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளரால் ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். அத்தோடு மீனவர் சங்கங்களால் வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும். அதிலும் ஒன்றரை மாதங்களுக்குள் செய்யக் கூடியவை செய்து தரப்படும்.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அதில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மீன்பிடித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ், வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர், உயர் அதிகாரிகள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் விஜயத்தின் போது பிரதேசத்தின் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் துறைமுக அதிகாரிகளை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வாழைச்சேனை, களுவன்கேணி மீனவர்களால் அமைச்சரிடம் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. களுவன்கேணி துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையம் நீண்ட காலமாக செயற்படாமல் உள்ளதாகவும் தங்களது குறித்த தேவையை பூர்த்தி செய்ய பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அத்துடன் இறங்குதுறை இல்லாமை மற்றும் வீதி புணர்த்தாரனம் தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

இதேபோன்று வெளியிடத்தில் இருந்து ஜஸ் கட்டிகளை வாழைச்சேனை துறைமுக பகுதிக்குள் எடுத்துச் செல்வதற்கு துறைமுக உத்தியோகத்தர்களால் பணம் அறவிடப்படுவதனை நிறுத்தி தருமாறு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவ்விடயம் தொடர்பாக உடனடியாக மீனவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பண அறவீடுகளை நிறுத்துமாறு அமைச்சர் துறைமுக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad