'உள்ளூராட்சி மன்றங்களின் உதவியை அரசியலாக்கி தடுப்பது மனிதாபிமானப் பேரவலத்துடன் விளையாடுவதற்குச் சமன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

'உள்ளூராட்சி மன்றங்களின் உதவியை அரசியலாக்கி தடுப்பது மனிதாபிமானப் பேரவலத்துடன் விளையாடுவதற்குச் சமன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

மத்திய அரசாங்கத்தின் உதவித்திட்டம் இதுவரை மக்களைச் சென்றடையவில்லை. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களினால் உதவிகள் வழங்க முன்வரப்படுவதை அரசியலாக்கி தடைகளை ஏற்படுத்துவதை விடுத்து அரசியலற்ற ஒழுங்குபடுத்தலின் கீழ் செயற்படுத்த உரியவர்கள் முன்வர வேண்டும். இல்லையேல் நடைமுறைத் தடைகள் மக்களின் மனிதாபிமானப் பேரவலத்துடன் விளையாடுவதற்குச் சமனாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

அரசாங்கம் ஊரடங்கு பொறிமுறையினை அறிவித்து இன்றுடன் பத்து நாட்கள் கடந்து விட்டன. இதுவரையான காலப்பகுதியில் நாளாந்தம் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பங்களுக்கு உலருணவுகளோ, இழப்பீடுகளோ அரசினால் சென்றடையவில்லை. இது அரசின் பொறுப்புச் சொல்லும் வகிபாகத்தினை கேள்விக்கு உட்படுத்துகின்றது. 

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை ஏற்படுத்திய பின்னரே நாட்டினுள் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஆகவே அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள், நாளாந்தம் வருமானம் பெறுவோரின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளுக்கான பொறிமுறைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவே அனர்த்த முகாமைத்துவம். 

அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாட்டு விலைகளிலும் பொருட்களைப் பெறமுடியவில்லை. முட்டை 10 ரூபா என்றார்கள் கோழி வளர்ப்பாளர்களுக்கு எந்த மானியத்திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மீன் டின் 100 ரூபா, பருப்பு 65 ரூபா என்றார்கள் பொருள் உரிய விலையில் சந்தையில் இல்லை. 

நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றாடத் தொழிலாளர்களாகவுள்ளனர். அவர்களது ஜீவனோபாயம் பற்றி பெரிய நிகழ்ச்சி நிரல்கள் போட்டு திட்டங்களைச் செயற்படுத்துவற்கு இது நேரமல்ல. பசித்தவனுக்கே உணவளிப்பதற்கான நேரம் இது. அதற்கான விரைவுப் பொறிமுறையினை அரசு ஏற்படுத்தவேண்டும். 

இந்நிலையில் மாகாண மட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட அவைத்தீர்மானத்தின் வாயிலாக உத்தரவாதமளிக்கப்பட்ட தொகைகளை நிவாரண நடைமுறைப்படுத்தலுக்கு மாகாணமோ, மத்தியோ தடையாக இருக்கக் கூடாது. 

மக்களைப் பதுகாப்பதற்கான நேரத்தில் அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடாது. உள்ளுராட்சி மன்றங்கள் உதவினால் அது அரசியலாகப் போய்விடும் என்ற கருத்துக்களை எண்ணங்களை சகலரும் கைவிட வேண்டும். 

அரசியல் மக்களுக்காக உழைப்பதற்கானது. மக்களுக்கு சேவை தேவைப்படும்போது அரசியல் தரப்புக்கள் வரப்பிரசாதங்களுடன் இயங்காமலிருங்கள் என்பது விசித்திரமானது. உள்ளராட்சி மன்றங்கள் உரிய அரச நிர்வாகப் பொறிமுறையின் ஊடாக கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவே உதவ முன்வருகின்றன. அனர்த்தவேளை ஒன்றில் சட்டப்புத்தகத்தினை மட்டும் கையில் வைத்து வாசித்துப்பணியாற்ற முடியாது. 

மத்திய அரசாங்கத்தின் நிதி அதிகாரத்தில் கூட பாராளுமன்றத்தினைக் கூட்டாது எதிர்காலத்தில் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற நியாயபூர்வமான கேள்விகள் இருக்குமிடத்தில் உடனடியாக மக்களின் மனிதாபிமான விடயத்தில் நிதி ஒதுக்கீடு செய்து உதவக்கூடிய உள்ளராட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கு தடைகள் விதிக்கப்படக்கூடாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment