மூன்று தசாப்தம் பின்னோக்கி நகரும் கல்குடா முஸ்லிம் அரசியல் ?? - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

மூன்று தசாப்தம் பின்னோக்கி நகரும் கல்குடா முஸ்லிம் அரசியல் ??

எம்.ஐ.லெப்பைத்தம்பி
(The Director, Thehotline.lk)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் தேர்தலுக்கான தினமும் குறிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் பதவியிழந்துள்ள நிலையில், பல தமது ஓய்வூதியங்களையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தை அலங்கரித்த பலர் மீண்டும் அந்த சுகபோகங்களை அனுபவிக்க பல்வேறு வியூகங்களையும் திட்டங்களையும் வகுத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், புதிய முகங்கங்களும் களமாடத் தயாராகி வருகின்ற சூழலில், அடுத்து வரும் சில வாரங்கள் சூடான செய்திகள், கட்சித்தாவல்கள், கூட்டுச்சேரல்கள் கழுத்தறுப்புக்கள், காய் நகர்த்தல்கள், கூட்டமைப்பு உருவாக்கல்கள் எனப்பல்வேறு சாகசங்கள் நிகழக்காத்திருக்கின்றன.

இலங்கை வரலாற்றில் எப்போதுமில்லாதளவுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கிய தேர்தலாகவும் சிறுபான்மை தங்களது தலைவிதியை மாற்றி எழுதுகின்ற வரலாற்று நிகழ்வாகவும் குறித்த தேர்தல் அமையப்போவது என்பது உறுதி.

விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதான பிரமிப்பில் ஒரு இனத்தின் மீதான தீர்வுகள் மறுக்கப்பட்டு வரும் தொடர் சூழலில், பயங்கரவாதத்திற்கெதிரான செயற்பாடு என்ற போர்வையில் ஒரு இனத்தின் மத சுதந்திரம், கலாசாரங்கள் மீதான அடக்குமுறை மேலோங்கியுள்ள காலச்சூழலில் எதிர்கொள்ளும் ஒரு தேர்தலாக இது அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த இலங்கையர்களும் ஒன்றித்து நாட்டின் பொருளாதாரப்பின்னடைவு, வறுமை, அதிகரித்த போதைப்பொருள் பாவனை, அந்நிய ஆதிக்கம், வேலையில்லாப்பிரச்சினை போன்றவற்றுக்கெதிராக போராட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் போட்டி நிறைந்த தேர்தலாக இது அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்றில் இரண்டு பெருமபான்மை என்ற இலக்கோடு ஆளும் அரசும், நாங்களே ஆட்சியமைப்போம் என எதிரணியும், தீர்வுகளே தீர்க்கமான முடிவு என தமிழர்களின் ஏகோபித்த மக்கள் ஆணை பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பும், இருக்கின்ற பிரதிநிதித்துவங்களையாவது காப்பாற்றிக்கொள்வோம் என முஸ்லிம் கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் களக்காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சூழலில் சிறுபான்மை முஸ்லிம்களை இலக்காகக்கொண்டு பல சிறு சிறு கட்சிகள், குழுக்களும் களமாடத் தயாராகி வரும் பரபரப்பான காலத்தில் பெரும்பான்மை இனம் பற்றி, பெரும்பான்மைக்கட்சிகளும் தலைமைகளும் தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டு வரும் சூழலில், மற்றொரு சிறுபான்மை இனமான தமிழர்கள் புலம்பெயர் அமைப்புக்கள், டயஸ்போராக்களின் பெரும் பண பலத்துடன் தமிழர் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியான சாத்வீகப்போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களின் பின்புலத்துடன் வடக்கு கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதற்கான செயற்பாடுகளை முடுக்கி விட்டு அதற்கான இரகசிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகம் தனிதனி தலைவர்களாக தனி தனிக்கட்சிகளாகப் பிராந்திய, பிரதேச ரீதியாகப் பிரிந்து நின்று பலகீனப்பட்டுள்ள நிலையில், எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, சுய நிர்ணயம், உரிமை சார்ந்து பொது மேசைக்கு வர வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்கள், மாகாண மாவட்ட ரீதியில் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட பிரதிநிதித்துவங்களையாவது காப்பாற்றிக்கொள்ள ஒரு குடையின் கீழ ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதனைப்படையில், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக ஆழ்ந்து சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம், கடந்த காலங்களில் வெவ்வேறு கட்சிகளில் மாவட்ட விகிதாசாரத்திற்கேற்ப இரு பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை உரிமை சார்ந்த அரசியலில் இலக்கை அடைந்து கொள்ள முடியாமல் போனாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக இரண்டு தெரிவு முறை நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டமை இமாலய சாதனை.

இவ்வாறான நிலையில், இன்று மீண்டுமொரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பில் புலம்பெயர் அமைப்புகளும், தமிழ் சமூக ஆர்வலர்களும் உடன்பாடு ரீதியான நிலைப்பாட்டுக்குள் வந்து கூட்டமைப்பு போனஸ் ஆசனத்துடன் மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதால், நான்காவது ஆசனத்துக்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஏனைய உதிரிக்கட்சிகளை இணைத்து போட்டியிடச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

அதன் பின்னணியிலேயே அரச அங்கீகாரத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பாக முன்னாள் முதலைமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) தேர்தலில் போட்டியிடுவதற்கான நீதிமன்ற அனுமதி கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவரது வெற்றியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஏனைய சிறிய கட்சிகள் இணைந்து கொள்ளும் அதே வேளை, கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு போட்டியாக பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டமையும், முக்கிய சபைகளின் ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டமையும் அவரது பாராளுமன்ற வெற்றிவாய்ப்புக்கும் வலுச்சேர்க்கும் என நம்பலாம்.

அத்தோடு, அரசின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகவுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அம்பாறையில் களம் காணும் முடிவை எடுத்தமையும் மேற்குறித்த இரகசியகத்திட்டத்தின் ஏற்பாடாகவும் இருக்கலாம். மேற்குறித்த காரண காரியங்களின் அடிப்படையில், நான்காவது ஆசனத்துக்கான விட்டுக்கொடுப்பை தமிழர் தரப்பு அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ளமை தெளிவாகின்றது.

இந்நிலையில், ஐந்தாவதாக ஒரு முஸ்லிம் ஆசனம் கிடைக்கலாமென்ற நிலையில், அதனைப்பெற்றுக் கொள்ளும் அதிக வாய்ப்பு கல்குடாதொகுதியின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. தனிப்பட்ட தனி நபர் குரோதங்கள், கட்சி வேறுபாடுகளை மறந்து, அவைகளைத்தள்ளி வைத்து விட்டு நாட்டின் இன்றைய அரசியல் அபாயகரமான சூழ்நிலையில் அந்த உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள வேண்டியது நமது கடப்பாடாகும்.

இன்றுள்ள நாட்டின் அரசியல் சூழ்நிலையில், குறித்த பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாக இருந்த சுமார் முப்பது வருட காலம் மட்டு மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் பின்னடைவைச்சந்திக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் அண்ணளவாக 38 ஆயிரத்துக்கும் அதிகமான செறிவுள்ள முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள கல்குடாத்தொகுதி எதை இழந்தேனும் இம்முறை பிரதிநிதித்துவத்தைப் பெற்றாக வேண்டும் அல்லது காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கால நிர்ப்பந்தம் உள்ளதாக உணரப்படுகின்றது.

இது காலவரை கடந்து போன அரசியலை அசை போட்டு மென்று கொண்டிருப்பதால் பிரதிநிதியை இழந்து வரலாற்றுத்தவறைச் செய்து மாவட்ட முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் செயற்பாட்டுக்கு கல்குடா முஸ்லிம் சமூகமும் நாம் ஒவ்வொருவரும் துணை போகக்கூடாது.

கட்சி, கொள்கை, பிரதேச, ஊர் பாகுபாடென்பது இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவாதப்பொருளாக இருக்க முடியாது. பிரிந்து நின்று இழப்பதை விட, ஒற்றுமைப்பட்டு காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. 

இதுவொரு தனிப்பட்ட தனி நபர் சார்ந்த அரசியலுக்காகவோ அல்லது பிரதேச நலன் சார்ந்ததாகவோ கட்சி அரசியல் செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாகவோ கொள்ளப்படாமல், எமக்கு முன்னாலுள்ள சவால்களைக்கருத்திற்கொண்டு அதனை எதிர்கொள்ளப் பொருத்தமான, அரசியல் ரீதியான அனுபவங்களைக் கொண்ட ஒருவராலே அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

சலுகை, அபிவிருத்தி அரசியல் தாண்டி சமூகத்தின் உரிமைக்கான அரசியலாக, முஸ்லிம் அரசியல் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்காக இரு பெரும் தலைமைகளும் கட்சிகளும் ஒன்றிணைவதுடன், இரு கட்சிகளின் அடிமட்ட தொண்டன் வரை கட்சித்தலைமைகளின் முடிவுகள், தீர்மானங்களுக்கு கட்டுப்பாடுடையவனாக மாற வேண்டும்.

இதுவொரு ஆரோக்கிய முஸ்லிம் அரசியலுக்கான பாதையாகட்டும்.

அடுத்தடுத்த தினங்கள் மாற்றங்கள், ஏமாற்றங்கள் நிறைந்தவையாகக் கூட இருக்கலாம்.

No comments:

Post a Comment