பிள்ளையான் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது நீதிமன்றம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 12, 2020

பிள்ளையான் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது நீதிமன்றம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன் உட்பட 5 பேர் சந்தேகத்தில் 2015-10-11 ஆம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியை கோரியிருந்தார்.

இதனையடுத்து இன்று (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் பரீசிலனைக்கு எடுத்து கொண்டார்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று 12 ஆம் திகதியில் இருந்து 19 ஆம் திகதி வரையிலான காலத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அனுமதியை வழங்கியதுடன் இந்த வேட்பு மனுத்தாக்கலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும் அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad