பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், முழுமையான அதிகாரங்களைத் தாம் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வர்த்தமானி வெளியான தினத்திற்குப் பின்னர் எந்தவிதமான நியமனங்கள், இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியாதெனத் தெரிவித்தார்.
அவ்வாறு நியமனங்கள், இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்த விதத்திலும் மத வழிபாட்டுத் தலங்களைத் தமது தேர்தல் பரப்புரைக்கான களமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியையோ, வேட்பாளர்களையோ மையப்படுத்திய எந்தவொரு நிகழ்ச்சியையும் மத வழிபாட்டுத் தலங்களில் நடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், வாக்காளர்களுக்குச் சன்மானம் வழங்குவது, நிவாரணப் பொருள்களைப் பெற்றுக்கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரித்தார்.
தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்கென வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை தரவிருப்பதாகக் கூறிய அவர், உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள் வழமைபோன்று தமது பணிகளை முன்னெடுப்பார்கள் என்றும் கூறினார்.
தேர்தல் பணிகளை முறையாகவும் செயற்திறன் மிக்கதாகவும் மேற்கொள்வது தொடர்பில் நாளைய தினம் (05) தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரை கொழும்புக்கு அழைத்துக் கலந்துரையாடுவதற்கும் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கைமேற்கொண்டுள்ளார்.
அதேசமயம், இன்று புதன்கிழமை (04) முற்பகல் 11 மணிக்கு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்துவதாகவும் திரு.மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் கடந்த எட்டாந்திகதி நள்ளிரவிலிருந்து கலைக்கப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து சகல அதிகாரத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் விதிமுறைகளை மிக இறுக்கமாகப் பேணுவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், நேற்றுக் காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர், மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்.
மதத் தலங்களில் தேர்தல் பரப்புரைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இதுபற்றித் தெளிவுபடுத்த நடவடிக்கைஎடுத்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், தேர்தலை நேர்மையாகவும் நீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் இதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதிக்குக் கடித மூலம் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ.எம்.நிலாம்
No comments:
Post a Comment