(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் பொதுமக்கள் முழுமையான ஆதரவை வழங்கினால் மாத்திரமே எம்மால் அதிலிருந்து முழுமையாக விடுபட முடியும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் மேலும் சில தினங்களுக்கு பொதுமக்கள் ஒன்று கூடுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போதுள்ள நிலைவரம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் கூட வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இந்நிலைமை நாட்டுக்குள்ளிருப்பவர்களிலும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொருவரும் உணர்ந்து தனித்திருப்பதே சிறந்ததாகும்.
இத்தாலியில் ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பரவலின் பாரதூரத்தன்மையை அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்காமை மற்றும் பொதுமக்களின் அசமந்த போக்கு என்பவையே நிலைமை தீவிரமடையக் காரணமாகும். தற்போது அந்நாட்டில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருக்கிறது.
நாம் அவ்வாறானதொரு நிலைக்கு முகங்கொடுத்தால் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கே கொரோனா வைரஸ் சவாலாக அமைந்துள்ள நிலைமையில் இலங்கையில் எவ்வாறான பாதகங்களை சந்திக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அதனை மீறிய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிராம புறங்களில் மக்கள் ஒன்று கூடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக தவித்துக்கொள்ள வேண்டும்.
எனவே அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால் வெகுவிரைவில் எம்மால் இந்த சவால்களிலிருந்து மீள முடியும் என்றார்.
No comments:
Post a Comment