பலம்வாய்ந்த பாராளுமன்றமொன்றை ஜனாதிபதிக்கு வழங்கி அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யவோ வெளிநாட்டவர்களுக்கு வழங்கவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
வாரியபொல சுமங்கல பிரிவெனாவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் நாட்டு வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்டன. இதற்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஹம்பாந்தோட்டை துறை முகத்தை வேறு நாட்டுக்கு விற்றார்கள். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரானார்கள். திருகோணமலைக்கும் கொழும்பிற்கும் இடையில் கோடு போட்டு இரு பக்கமும் இரண்டரை ஏக்கர் பொருளாதார பிரதேசமொன்றை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயற்சி நடைபெற்றது. இந்த திட்டத்தை நிறுத்த எமது அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால், சிலர் காலனித்துவவாதிகளுக்கு நாட்டு வளங்களை விற்கத் தயாராகின்றனர். நாட்டு வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றை ஆரம்பித்தோம். கண்டிக்கான நெடுஞ்சாலை பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் தேர்தல் நடைபெறும். இன்று சிறுபான்மை அரசே ஆட்சியிலுள்ளது. எதிரணிக்கே பெரும்பான்மை பலமுள்ளது. குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கூட நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. குறைநிரப்பு பிரேரணையை வாபஸ் பெற்று அது தோற்கடிப்பதை தவிர்த்தோம். இதனை நிறைவேற்றியிருந்தால், பல பணிகளை செய்திருக்கலாம்.
கடந்த காலத்தில் செலவிட்ட அபிவிருத்திகளுக்கான பணத்தையும் வழங்க முடிந்திருக்கும். பாராளுமன்றம் தேர்தலினூடாக உச்ச பலனை அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி சொல்வதை பாராளுமன்றமும் பாரளுமன்றம் சொல்வதை ஜனாதிபதியும் கேட்காத நிலை உருவாகியது. எதிர்வரும் தேர்தலில் பலம்வாய்ந்த பாராளுமன்றமொன்றை ஜனாதிபதிக்கு வழங்கி அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment