(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாடுகளின் காரணமாகவே மக்கள் இன்று பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதனால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அரசாங்கம் நிதிவுதவிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் காணொளியொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகளே பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், எமது நாட்டிலும் வைரஸ் பரவலின் காரணமாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலையிலே எமது மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கருதுகின்றேன். அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாட்டின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் இப்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இருப்பதற்கு, இதற்கு முன்னர் நகரத்தை மூடுவதனூடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும். அதனை விடுத்து தற்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதமே இந்த வைரஸ் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் அறிவுறுத்தியிருந்தேன். அரச தரப்பினர் இது தொடர்பில் என்னை விமர்சித்தனர். எனது கருத்துக்களால் சீனா - இலங்கைக்கான நட்புறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இன்று மக்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக நாளாந்தம் வருமானம் ஈட்டி வாழ்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இடைக்கால வரவு செலவு திட்டத்தை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து வந்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கண்டுகொள்ள வில்லை. அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
மாறாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மார்ச் முதலாம் திகதியே பாராளுமன்றத்தை கலைத்தனர். தற்போதைய நிலையில் தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம். இவ்வாறான நெருக்கடி நிலைமைகளின் போது ஏனைய நாடுகள் எவ்வாறு செயற்பட்டுள்ளன என்பதை ஆதாரமாகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.
இத்தகைய நெருக்கடியான நிலைமையில் பாராளுமன்றத்தை கூட்டியோ, கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியோ அல்லது அனைத்து தரப்பினருடனான கலந்தரையாடல் மூலமாகவோ சிறந்த தீர்மானங்களை எடுக்க முடியும். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை ஆயுதங்களை கொண்டு கட்டுப்படுத்த முடியாது. உரிய சுகாதார நடவடிக்கைகளின் மூலமாகவே இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும். ஆட்சியாளர்களுக்கு ஒளடத தட்டுப்பாடோ, முகக் கவசங்களுக்கான தட்டுப்பாடோ ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் சாதாரண மக்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்கா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மருந்து வகைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி மக்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
மற்றும் தற்போது வீடுகளில் இருக்கின்ற சாதாரண மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கம் நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கான முகக் கவசங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். அதற்கமைய தரமான முகக் கவசங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment