தேர்தலை பிற்போடும் அதிகாரம் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு, இவ்விடயத்தில் ஒருபோதும் தலையிடமாட்டேன் : ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

தேர்தலை பிற்போடும் அதிகாரம் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு, இவ்விடயத்தில் ஒருபோதும் தலையிடமாட்டேன் : ஜனாதிபதி

(இராஜதுரை ஹஷான்) 

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்ட மக்களாணையினை முறையாக செயற்படுத்த முடியாமல் போனதாலேயே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயித்தேன். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு குறிப்பிடுகின்றார்கள் தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு. ஒருபோதும் தலையிடமாட்டேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதமர், இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார அமைச்சர், விசேட வைத்திய நிபுணர்கள், மற்றும் தொழிந்துறை வல்லுணர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள். இதன் போது கருத்துரைக்கையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பெற்றுக் கொண்ட மக்களாணையினை முழுமையாக செயற்படுத்த முடியாத நெருக்கடி காணப்படுகின்றது. இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக ஆட்சியமைத்துள்ளோம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் அரசாங்க்த்திற்கு கிடையாது. இதுவே பல பிரச்சினைகளுக்கு பிரதான காரணி. 

மக்களுக்கான அபிவிருத்திகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது பெரும்பான்மை பலம் அவசியம். ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் போது இடைக்கால கணக்கறிக்கையே சமர்ப்பிக்கபட்டிருந்தது. ஆனால் அபிவிருத்தி ஒப்பந்தக்காரர்களுக்கும், தொழிற்தரப்பினருக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை பல மடங்கு காணப்பட்டன. 

அரசாங்கத்தின் செலவீனங்கள் இன்றைக்கு இவ்வளவு தான் என்று ஒருபோதும் வரையறை செய்ய முடியாது. தேவைகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதிகரிக்கலாம். அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும், மக்களுக்கு நிவாரம் வழங்குவதற்கும் அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை சமர்ப்பித்தது. 

ஆனால் இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியினர் (ஐக்கிய தேசிய கட்சி) ஆதரவு வழங்காமல் இருக்க தீர்மானித்ததை முன்கூட்டியே அறிந்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணையை மீள பெற்றுக் கொண்டோம். பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தின் பலவீனத்தை அப்போது உணர்ந்தேன். 

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் கிடைத்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தை மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவு கலைத்து ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த விசேட வர்த்தமானியை வெளியிட்டேன். 

தேர்தலுக்கான நவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. 

ஆகவே தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து மாவட்ட அலுவலகத்தில் கையளியுங்கள். இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும். என்ற நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்துள்ளார்கள். 

தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள திகதியை மாற்றியமைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு. இவ்விடயத்தில் ஒருபோதும் நான் தலையிடமாட்டேன். பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என்று குறிப்பிடுவதன் அவசியம் கிடையாது. பாராளுமன்றத்தை கூட்டினால் மீண்டும் நிதி தொடர்பான நெருக்கடி ஏற்படும். 

தற்போது அரசியலமைப்பின் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ள நிதி தொடர்பான அதிகாரங்களை கொண்டே நாட்டின் அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே தேவையற்ற சிக்கல் நிலைகள் தோற்றம் பெறுவது பயனற்றதாகும். கொரோனா வைரஸ் தொற்றினை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். என்றார்.

No comments:

Post a Comment