இராஜதந்திர அரசியலை முன்னெடுத்தால் மட்டும்தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும், இல்லாவிட்டால் மாற்றுச் சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

இராஜதந்திர அரசியலை முன்னெடுத்தால் மட்டும்தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும், இல்லாவிட்டால் மாற்றுச் சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்படும்

தமிழ் சமூகம் சரணாகதி அரசியலையும், எதிர்ப்பு அரசியலையும் கைவிட்டு இராஜதந்திர அரசியலை முன்னெடுத்தால் மட்டும்தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். 

கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்கு வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. 

இவ் வீடு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் சுமார் 06 இலட்சம் ரூபா செலவில் அரசின் முழுமையான பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளது. 

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். 

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது தொடர்ந்து பேசிய அவர், அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாத ஒரு சமூகமாக தமிழ் சமூகம் இன்று காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு வீடுகள் இல்லை. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் இருக்கின்றன. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25,000 பேர் மத்திய கிழக்கு நாடுகளை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். அதில் எட்டாயிரம் பணிப் பெண்கள் உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளும் இல்லையென்றால் அவர்களின் நிலைமையென்ன? 

பொதுஜன பெரமுன கட்சியானது தமிழர்களையோ அல்லது முஸ்லிம்களையோ சேர்த்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது. மாறாக தனி சிங்கள வேட்பாளர்களுடன் மட்டும் 99 வீதமான இடங்களில் போட்டியிட்டு வெற்றியடைந்து அரசாங்கத்தை அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வடக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் போன்றோர்கள் முன்னெடுக்கின்றார்கள்.

வடக்கு தமிழ் தேசிய தலைமை அவர்களை ஏற்றுக்கொள்கின்றது. கிழக்கிலே உரிமையுடன் அபிவிருத்தியை முன்னெடுத்தால் துரோகி என்று பட்டம் சூட்டுவார்கள். இது கிழக்கு மாகாணத்தின் சாபக்கேடாகும். 

இன்று கிழக்கிலே 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் 38.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளார்கள். சரணாகதி அரசியலையும், எதிர்ப்பு அரசியலையும் தமிழ் மக்கள் கைவிட்டு விட்டு இராஜதந்திர அரசியலை முன்னெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் மாற்றுச் சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்படும் எனத் தெரிவித்தார். 

(வெல்லாவெளி  நிருபர்)

No comments:

Post a Comment