சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது - பிடிவிறாந்தின்றி சிறைக்கு உட்படுத்த முடியும் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது - பிடிவிறாந்தின்றி சிறைக்கு உட்படுத்த முடியும்

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (COVID-19) செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான காலாநிதி பந்துல குணவர்த்தன, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். 

சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டிக்கு அமைவாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இவற்றை சீர்குலைக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இது தடுப்பு நடவடிக்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் இவ்வாறு செயற்பட்ட 23 பேர் தொடர்பாக விசாரனை நடத்தப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒருவர் நிமித்த பிரியதர்ஷன, மற்றுமொருவர் துஷ்மந்த என்பராவர். இவர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 40 பேர் தொடர்பில் விசாரனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் உரிய தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக நாடு முழுவதிலும் இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதிலும் பொதுமக்களை தெளிவுப்படுத்தும் முகமாக சுவரொட்டிகளை ஒட்ட உள்ளது. இது தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிடிவிறாந்தின்றி சிறைக்கு உட்படுத்த முடியும். குற்றமிழைத்தமை உறுதி செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 1000 ரூபா தண்ட பணமும் விதிக்கப்படும். இந்த தவறுகளுக்கு ஒத்தாசை வழங்குவோரும் குற்றவாளிகளாகவே கணிக்கப்படுவார்கள். இவர்களுக்கு எதிராகவும் குறிப்பிடப்பட்ட தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment