அரசாங்க, தனியார் ஊடகங்களுக்கு ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை - ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும் விசனத்தை தெரிவித்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

அரசாங்க, தனியார் ஊடகங்களுக்கு ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை - ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும் விசனத்தை தெரிவித்தார்

பொதுத் தேர்தல் காலங்களில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சகல கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கி நடுநிலையாக செயற்பட வேண்டுமெனத் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனை மீறும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்நிற்கப்போவதில்லை என்று எச்சரித்துள்ள அவர், இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் ஊடக நிறுவன தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று தேல்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் அரச மற்றும் தனியார் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விசனம் தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, இம்முறை தேர்தலில் அவ்வாறான குறைபாடு ஏற்படாத வகையில் ஊடக நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தனக்கு அரச நிறுவனங்கள் தொடர்பில் செயற்படவே அதிகாரம் உள்ளபோதும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் செயற்பட அதிகாரமில்லாதது குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் சட்டமா அதிபருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் என்று பேதமின்றி, சகல ஊடக நிறுவனங்கள் தொடர்பிலும் ஒரேமாதிரியான நடவடிக்கையே எடுக்க உள்ளதால் பக்கச்சார்பின்றி சகல ஊடகங்களும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சகல கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் என்பவற்றுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளையும் ஒரு தரப்பிற்கு மாத்திரம் சாதகமான செய்திகளையும் தவிர்க்குமாறும் அவர் இதன் போது வேண்டு கோள்விடுத்தார்.

கடந்த காலத்தில் ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுவதோடு நின்று விட்டதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் தேர்தல் சட்டத்தை மீறி பக்கசார்பாக செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க பின்நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

தேர்தல் முடிவுகளை கொழும்பிலிருந்தே வழமை போன்று அறிவிக்க இருப்பதாகவும் மாவட்டங்களுடன் நேரடி இணைப்புடன் துரிதமாக அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தேசப்பிரிய குறிப்பிட்டார்.

தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் நடைபெறும் சந்திப்பில் இந்த விடயங்கள் பற்றி ஆராயப்படும். தேர்தல் காலத்தில் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளை தவிர்ப்பது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்கள் முன்வைத்த யோசனைகள் தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கடந்த திங்களன்று கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருவதோடு பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களையும் நடத்தி வருகிறது.

எதிர்வரும் வாரங்களில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளதுடன், மதத்தலைவர்கள், பாதுகாப்பு தரப்பு ,தேர்தல் கண்காணிப்புக் குழுவினரையும் அவர் சந்திக்கவுள்ளார். 

எம்.ஏ.எம்.நிலாம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment