அம்பாறையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

அம்பாறையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்

அம்பாறையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி அநாவசியமாக நடமாடி திரிபவர்களுக்கு ஒலி பெருக்கி வாயிலாக பொலிசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

நாடு முழுவதும் 60 மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து அம்பாறை நகரப்பகுதி, கல்முனை மாநகரப் பகுதி, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, மல்வத்தை உள்ளிட்ட பகுதிகள் நேற்று முதல் இன்று அதிகாலை வரை வெறிச்சோடிக் காணப்பட்டன. 

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து சில இடங்களில் முழுமையாக சன நடமாட்டமின்றி அதிகாலை வேளை வெறித்தோடி காணப்பட்டது. அத்துடன் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் பூட்டப்படாத சில கடைகள் பொலீஸாரால் எச்சரிக்கை செய்யப்பட்டு பூட்டப்பட்டன. 
இதன்போது பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி விசேட வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. 

மேலும் இடையிடையே அப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். 

அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாகி இருப்பதால் அரசாங்கம் அவசர கால நிலையை கருத்திற் கொண்டு ஊரடங்கு சட்டத்தை பிரகடனம் செய்து இருக்கிறது. 
இவ்வாறு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள போது ஒருவர் அநாவசியமாக தேவையில்லாமல் வெளியே சென்றால் அது ஊரடங்கு சட்ட விதி முறைகளை மீறியதாக கொள்ளப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் பிரிவு 16 க்கு அமைவாக குற்றமாக கொள்ளப்பட்டு ஒரு மாத கால சிறைத் தண்டனையும் தண்டப் பணமும் செலுத்த வேண்டி ஏற்படலாம். மேலும் இந்த சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றியும் கைது செய்யலாம். 

பொதுவாக ஒருவர் அவசிய தேவைக்கு வெளியில் செல்லலாம். ஆனால் அது தொடர்பாக முறையான ஆதாரங்கள் காட்டப்படல் அவசியமாகும். மேலும் இந்த நேரத்தில் போலீசார் சந்தேகப்பட்டால் எம்மை கைது செய்ய முடியும் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். 

எனவே அவசிய காரணத்துக்காக மட்டுமே நான் வெளியில் செல்ல வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவும். எனவே அவசர தேவை அல்லாமல் வெளியில் திரிவதை இயன்றளவு குறைத்துக் கொள்வோம் என அறிவிப்புகளை செய்துமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 

இதேவேளை இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாறூக் ஷிஹான்

No comments:

Post a Comment