மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டி - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் படகு சின்னத்தில் 8 தமிழர்கள் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்காக சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஜி.ஹரிகரன் (கிரி) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - திருகோணமலை வீதி வை சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாவட்ட தலைவர் ஜி.ஹரிகரன் (கிரி) இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசிறி தயாசேகரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் பேசி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் படகு சின்னத்தில் 8 தனி தமிழர்களை மாத்திரம் கொண்ட வேட்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

இதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டு வேட்பாளர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் 6 வேட்பாளர்களாக 8 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.

மக்களின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளோம். எனவே அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து படகு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று பிரதேச சபை ஒன்றை கைப்பற்றியதுடன் பல உள்ளூராட்சி உறுப்பினர்களை பெற்றது. 

அதேபோன்று ரி.எம்.வி.பி கட்சியும் கணிசமான வாக்குகளைப் பெற்று பல உறுப்பினர்களை பெற்றது. எனவே இந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்று அமைச்சு பதவிகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மற்றும் கட்சியின் மட்டு மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad