சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்தது - இதுவரை 65,541 நோயாளிகள் குணமடைந்தனர் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 14, 2020

சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்தது - இதுவரை 65,541 நோயாளிகள் குணமடைந்தனர்

சீனாவில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ளது. இதுவரை 65 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சீனாவில் ஆரம்பத்தில் தினமும் கொத்துக் கொத்தாக மக்கள் பலியான நிலையில், இப்போது அங்கு வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு விகிதமும் கணிசமாக குறைந்துவிட்டது. பெரும்பாலான நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சீனாவில் நேற்று மேலும் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3189 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3189 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 94 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 65 ஆயிரத்து 541 பேர் குணமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 1430 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு 95 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஹாங்காங்கில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். மக்காவில் 10 பேருக்கும், தைவானில் 50 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad