கொரோனா பாதிப்பு 28 ஆக அதிகரிப்பு தொற்றை மறைத்த இருவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு - 13 வயது சிறுமி உட்பட நால்வர் நேற்று அடையாளங் காணப்பட்டனர் - தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை நடத்துவது தடை - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

கொரோனா பாதிப்பு 28 ஆக அதிகரிப்பு தொற்றை மறைத்த இருவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு - 13 வயது சிறுமி உட்பட நால்வர் நேற்று அடையாளங் காணப்பட்டனர் - தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை நடத்துவது தடை

கொரோனா நோய் தொற்றியிருப்பதை மறைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முரணாகச் செயற்பட்ட மாணிக்கக் கல் வர்த்தகருக்கும் அவரின் மனைவிக்கும் எதிராக கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணிக்கக் கல் வியாபாரி தற்பொழுது அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் இவரையும் சேர்த்து கொரோனா தொற்றியோர் தொகை நேற்றுடன் 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

13 வயது சிறுமி உட்பட நால்வர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான 100 பேர் நாடு பூராகவுமுள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நோயை மறைப்பவர்களுக்கும் அதற்கு உதவுவோருக்கும் எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை சந்தேகித்திற்கிடமான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் ஆஸ்பத்திரிகளின் தொகை 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். 

நேற்று நண்பகல் 13 வயது சிறுமி ஒருவரும் 37 மற்றும் 50 வயதான இரு ஆண்களும் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டதுடன், கராப்பிட்டிய ஆஸ்பத்திரியில் நேற்று மாலை மற்றொரு கொரோனா வைரஸ் நோயாளியும் கண்டிபிடிக்கப்பட்டார். 73 வயதான இந்நபரையும் சேர்த்து கொரோனா தொற்றியோர் தொகை 28 ஆக உயர்ந்துள்ளது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த டொக்டர் அனில் ஜாசிங்க, ஜெர்மனியில் இருந்து வந்த நபரொருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கடந்த 12 ஆம் திகதி கண்டறியப்பட்டது. இவருடன் இருந்த மற்றொரு நபருக்கும் கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு அறிவிக்கப்பட்டது. 

ஆனால் மாணிக்கக் கல் வர்த்தகரான அவர் தனது குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளதோடு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பரிசோதனைகள் செய்துள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் மனைவியே பதில் வழங்கியுள்ளார். 

மூன்று தினங்கள் இவ்வாறு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ள இவர், இறுதியாக களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ள நிலையில் அவர் அங்கொட தொற்று நோய் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அவரின் மனைவியும் உதவியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொறுப்பின்றி செயற்படுவோர் இந்த நிலைமை குறித்து உணர வேண்டும்.

இது தவிர கடந்த 10 ஆம் திகதி இலண்டனில் இருந்து வந்த ஒருவரும் அரச ஆஸ்பத்திரியில் அனுமதி பெறாமல் தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்துள்ளார். கொரோனா தொற்றியிருப்பது உறுதியான நிலையில், அவர் அங்கொட தொற்று நோய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வறியவர்களன்றி வசதி உள்ளவர்களே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் சிலர் அவற்றில் பரிசோதனை செய்துள்ளனர். எமது அறிவிப்பை மீறி ஆஸ்பத்திரிகள் செயற்பட்டிருப்பது தொடர்பில் மீண்டும் அறிவுறுத்தல் வழங்க இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, கல்கிஸ்ஸ மாணிக்கக் கல் வியாபாரிக்கு பல்வேறு வழிகளிலும் அறிவித்தல்கள் அனுப்பப்பட்டன. ஆனால் வேண்டுமென்றே தலைமறைவாகி வந்த நிலையில் அதிரடிப்படையை பயன்படுத்தி அவரை வெளியில் கொண்டுவர நேரிட்டது. அவர் தனது பிள்ளைகள் குறித்து கூட சிந்திக்காமல் இவ்வாறு நடந்துள்ளார்.

அவரின் மனைவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மாணிக்கக் கல் வியாபாரியின் அசையும் அசையா சொத்து தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நோயை மறைப்பவர்களுக்கும் அதற்கு உதவுபவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad