23 இராணுவ அதிகாரிகளின் பங்களாக்கள் மேலதிமாக இணைப்பு - தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1800 - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

23 இராணுவ அதிகாரிகளின் பங்களாக்கள் மேலதிமாக இணைப்பு - தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1800

கொரோனா வைரஸ் பீடித்துள்ளவர்களை கண்டறிவதற்காக தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு மேலும் 23 இராணுவ அதிகாரிகளின் பங்களாக்களை ஒதுக்கியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

தற்போது இராணுவம் தியத்தலாவையில் 12 தனிமைப்படுத்தல் நிலையங்களை செயற்படுத்தி வருகிறது. இதற்கு மேலதிகமாக 23 பங்களாக்களை தனிமைப்படுத்தும் நிலையங்களாகப் பயன்படுத்துவதற்கு, தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

லண்டனில் இருந்து இலங்கை வந்துள்ள சில பயணிகளில் சிறுவர்களும் உள்ளனர். இச்சிறுவர்கள் இந்த விடுமுறை பங்களாக்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நேரடி ஒளிபரப்பு ஒன்றில் இணைந்து கொண்ட இராணுவத் தளபதி, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இதனால் பொம்பேமடு, புணானை, கந்தக்காடு, பனிச்சாங்கேணி, மீயன்குளம், பொவெவ, கல்கந்த, கஹகொல்ல மற்றும் தியத்தலாவை இராணுவத் தள வைத்தியசாலை மற்றும் தந்தெம்பே ஆகிய இடங்களிலும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை இராணுவத்தினர், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, மேல் மாகாண ஆளுநரின் அலுவலகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிலைய அதிகார சபை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை பொலிஸ், இலங்கை விமானப்படை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட முகாமைகளுடன் இணைந்து இதுவரை நாடளாவிய ரீதியில் 12 தனிமைப்படுத்தல் நிலையங்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் 1723 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்ளோரில் எட்டுப் பேர் வெளிநாட்டினரும் உள்ளனர். இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொலைக்காட்சி, வைபை, நீர் சூடாக்கிகள், மின் விசிறிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், பத்திரிகைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. 

இதேவேளை மேற்படி நிலையங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்று 1800 வரை அதிகரித்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இங்கு, இராணுவ சமையற்காரர்கள் மேற்கொள்ளும் சமையல் வேலைகளை பொதுச் சுகாதார அதிகாரிகள் பரிசோத்து சுவைத்துப் பார்த்த பின்னரே, தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு வழங்குவதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

தினகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad