குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின், புதிய நீர் இணைப்புக்கான ஆரம்பக் கட்டணத்தை ரூபா 2,500 ஆக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் (04) சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் மக்கள் தொகையில் 41 வீதமானோர் குழாய் நீர் மூலம் குடிநீரை பெறுகின்றனர். அதற்கமைய 2.4 மில்லியன் குடி நீர் விநியோக இணைப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையினால் வருடாந்தம் 110,000 வீட்டு நீர் விநியோக இணைப்புகள் மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இந்நீர் இணைப்புகளை பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் 20,000 ரூபா வரையிலான ஆரம்பக் கட்டணத்தை ஒரே தடவையில் அல்லது மாதாந்தம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த ஆரம்பக் கட்டணமானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு 8,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, குறைந்த வருமானம் பெறுவோரால் ஒரே தடவையில் இக்கடணத்தை செலுத்த முடியாத நிலையை கருத்திற்கொண்டு, ஆரம்பக் கடணத்தை ரூபா 2,500 ஆக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், ரூபா 2,500 இனை செலுத்தி இணைப்பை பெற்று நீர் வசதியை பெறுவதுடன், அதன் பின்னர் மிகுதியை மாதாந்தமாக செலுத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன் ஆரம்பக் கொடுப்பனவை செலுத்திய போதிலும் குறித்த பிரதேச நுகர்வோருக்கு வீட்டு குடி நீர் இணைப்புகளை வழங்குவதற்கு முடியாமல் உள்ளது.
இவ்வாறான இடையூறுகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு 2020 ஆம் ஆண்டில் முதல் இரு காலண்டுக்குள் புதிதாக 150,000 வீடுகளுக்கான நீர் விநியோக இணைப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment