(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எவ்வித அறிவித்தலுமன்றி ஊரடங்கு சட்டத்தை அறிவித்து அதனை குறுகிய நேரத்தில் அமுல்படுத்தியதால் பொருளாதர மற்றும் சமூக ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண அடிப்படையில் 10000 ரூபா வழங்கவும் புதிய நாணயத் தாள்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல உறுமய அமைப்பின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
யுத்தத்தை வெற்றி கொண்டதை போன்று பரவி வரும் வைரஸையும் கட்டுப்படுத்த முடியும் என்ற மனநிலையில் இருந்து அரசாங்கம் செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்த வெற்றியை விடுத்து வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுவது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசாங்கம் ஊடரடங்கு சட்டத்தை அறிவித்தால் பொதுமக்கள் பொருளாதார மற்றும் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பகல் நேரத்திலேயே ஊரடங்கு சட்டத்தை அறிவித்து அதனை அமுல்படுத்தியிருக்க வேண்டும்.
அவ்வாறு அறிவித்திருந்தால் மக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நேற்று (வெள்ளிக்கிழமை) மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டதன் பின்னரே ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டு அது குறுகிய நேரத்தில் அமுல்படுத்தப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் சொந்த இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளவும் அவசர பொருட்களை கொள்வனவிற்காக நகைகளை அடகு வைக்க வங்கிகள் மற்றும் அடகு நிலையங்களில் நெடுநேரம் வரிசையில் காத்துக் கொண்டிருந்தமை காணக் முடிந்தது.
இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 30 வரு ட கால சிவில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த எம்மால் பரவி வரும் கொடிய வைரஸ் தாக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்ற மனோநிலையில் அரசாங்கம் செயற்படுவதால் பொதுமக்களே இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நடுத்தர வருமானம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவினை பெறும் பயனாளிகளுக்கு அரசாங்கம் 10,000 ரூபாயை நிவாரண அடிப்படையில் வழங்குவதுடன் தற்போது புலக்கத்தில் உள்ள நாணயத் தாளுக்கு பதிலாக புதிய நாணயத் தாள்கள் மற்றும் நாணய குற்றிகளை மக்கள் மத்தியில் அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். நாணயத் தாள் பாவனை ஊடாக இந்த வைரஸ் தீவிரமாக பரவுவதாக குறிப்பிடப்படுகின்றது.
பரவி வரும் கொரோனா வைரஸ் பூகோள ரீதியில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதுவரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
எமது நாடும் இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளது. பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றமடைய செய்ய வேண்டுமாயின் முறையாக பொருளாதார திட்டங்களை வகுக்க வேண்டும்.
அரசாங்கம் தற்போது தேர்தல் செயற்பாடுகளுக்காக அரசியலமைப்பிற்கு எதிராக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை விடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி உரிய முறையில் செயற்பட வேண்டும்.
யுத்த வெற்றி மனோ நிலையினை விடுத்து வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment