ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் குரல் பதிவு தொடர்பான எனது முடிவை எதிர்காலத்தில் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது. அந்த குரல் பதிவுகளை நால்வரடங்கிய குழு அமைத்து செம்மைப்படுத்தி சமர்ப்பிக்க கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று பிற்பகல் கூடியது. இதன்போது குரல் பதிவு குறித்து அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, ஜனவரி 21ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்க எம்.பி பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
சில குரல் பதிவுகளை சபைக்கு சமர்பிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் அன்றைய தினம் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை. 27ஆம் திகதி மாலை அவரால் 19 குரல் பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குரல் பதிவுகளை எம்.பிக்களுக்கு வழங்குமாறு எம்.பிக்கள் சிலரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு நான் தெளிவுபடுத்தினேன்.
அங்கு ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய குறித்த குரல் பதிவுகளின் உள்ளடக்கங்கள் சிலவற்றை செம்மைப்படுத்துவதற்காக நான்கு எம்.பிக்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணம் தொடர்பாக இந்த சபையினால் முன்னெடுக்கப்படும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்பிரதாயங்கள் மற்றும் முறைமைகள் உள்ளன என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment