எமது கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் - விக்கினேஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 16, 2020

எமது கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் - விக்கினேஸ்வரன்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கூட்டமைப்பு தவறியுள்ளது. அதனால் எமது கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சிங்கள வார வெளியீடொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தவறி இருக்கின்றது. 

அவர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களின் சொந்த தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள செயற்பட்டு வந்திருக்கின்றனர். அதனால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது விரக்தியடைந்திருக்கின்றனர். 

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் தமிழ் மக்களின் எந்த தேவையையும் நிறைவேற்றிக் கொடுக்க முடியாது. குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் பல கோரிக்கைகள் இருக்கின்றன. 

அவற்றை நிறைவேற்ற கூட்டமைப்பு வெற்றிகரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள தவறியுள்ளது. அதனால்தான் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருக்கின்றோம். 

ஜனாதிபதி தேர்தலின்போது தயாரிக்கப்பட்ட பிரதான 13 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த 13 கோரிக்கைகளையும் பிரதான இரண்டு வேட்பாளர்களும் அன்று நிராகரித்திருந்தனர். 

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் 5 கட்சிகளில் 2 கட்சிகள் தற்போது எம்முடன் இருக்கின்றன. அதனால் எமது கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய சவாலாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad