நோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை - 40 பேர் பாதிப்பு! - News View

Breaking

Post Top Ad

Sunday, February 16, 2020

நோர்வூட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடியிருப்புகள் தீக்கிரை - 40 பேர் பாதிப்பு!

ஹட்டன், நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் இன்றிரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. 

குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 7 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

அதனையடுத்து நோர்வூட் பொலிஸார் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. 

ஆயினும் சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன. 

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 7 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், தோட்ட வைத்தியசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், நோர்வூட் பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் நோர்வூட் பொலிஸார், ஹட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad