அமெரிக்காவின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தல்! - News View

Breaking

Post Top Ad

Sunday, February 16, 2020

அமெரிக்காவின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தல்!

வெளிவிவகார அமைச்சர் தினஷே் குணவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பல் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின்போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடை அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முறையை அநாவசியமாக சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று அலெய்னாவிடம் கூறிய தினேஷ் குணவர்தன, வொஷிங்டன் அதன் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் முக்கிய பதவிகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பதற்கு ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு இருக்கும் தற்துணிவு அதிகாரத்தை வெளிநாட்டு அரசாங்கம் ஒன்று கேள்விக்குள்ளாக்குவது ஏமாற்றத்தை தருகிறது என்று விசனம் தெரிவித்திருக்கிறார். 

இராணுவத் தளபதியும் பதில் முப்படைகளின் தலைமைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் பயணத் தடை தொடர்பான இலங்கையின் உறுதியான ஆட்சேபனைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று அலெய்னா ரெப்லிட்ஸிடம் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியிருக்கிறார். 

இதன்போது இலங்கையின் அக்கறைகளை வொஷிங்டனுக்கு தெரியப்படுத்துவதாக அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸ் கூறியதுடன் தற்போது தொடரும் இலங்கையுடனான ஒத்துழைப்பின் சகல அம்சங்கள் தொடர்பிலான அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான பற்றுறுதியை அவர் மீளவும் வலியுறுத்தினார். 

பாதுகாப்புத் துறை உட்பட அந்த அம்சங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா அக்கறை கொண்டிருக்கிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார். 

வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, வட அமெரிக்க விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அதிகாரிகளும் தூதுவர் டெப்லிஸ்டுடன் தூதரகத்தின் பிரதி தலைவர் மாட்டின் ஹெலியும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள். 

இதேவேளை அமெரிக்க இராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் உடனடி பிரதிபலிப்பாக வெளியுறவு அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை முன்னதாக வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad