கைகொடுக்கின்ற செல்வமாக கல்விச் செல்வம்தான் இருக்கின்றது, அந்த செல்வத்தை நீங்கள் தடையின்றி கற்று முன்னேற வேண்டும் - மாவை எம்பி. - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

கைகொடுக்கின்ற செல்வமாக கல்விச் செல்வம்தான் இருக்கின்றது, அந்த செல்வத்தை நீங்கள் தடையின்றி கற்று முன்னேற வேண்டும் - மாவை எம்பி.

கைகொடுக்கின்ற செல்வமாகக் கல்விச் செல்வம்தான் இருக்கின்றது. அந்தச் செல்வத்தை நீங்கள் தடையின்றி கற்று முன்னேற வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார். 

சுவிஸ் பார்சல் செந்தமிழ்ச்சோலை நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் தாயகத்தில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றுவதற்குப் பல வகையான உதவிகளைச் செய்து வருகின்றார்கள். 

அவ்வாறு உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது கல்வியில் மிளிர வேண்டும் என்பதே அதற்கேற்றாற்போல் மாணவர்களாகிய நீங்களும் கல்வியில் மிளிர்ந்து வர வேண்டும். 

போரினால் பாதிக்கப்பட்டுப் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் துன்பங்களுக்கு மத்தியில்தான் அவர்களும் வாழ்ந்து வருகின்றார்கள். 

பலர் நித்திரை விழித்து வேலை செய்து தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வது போல தமது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி தாயகத்தில் வாழுகின்ற பிள்ளைகளும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இத்தகைய உதவிகளைச் செய்கின்றார்கள். 

இவர்களுக்குப் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கல்வியில் முன்னேறுவதற்கு உதவி செய்ய வேண்டும் பணம் அனுப்புகின்றார்கள் என்பதற்காக அதனை எடுத்து ஆடம்பரத்திற்காகச் செலவு செய்யாது உங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவே செலவு செய்ய வேண்டும். 

எந்தக் காலத்திலும் கல்விச் செல்வம்தான் கைகொடுக்கின்ற செல்வமாக இருக்கின்றது அந்தச் செல்வத்தை நீங்கள் தடையின்றி கற்று முன்னேற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment