‘கல்முனை தமிழ் மக்கள் நலன் கருதியே பிரதி மேயர் தெரிவில் போட்டியிடவில்லை’ - கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

‘கல்முனை தமிழ் மக்கள் நலன் கருதியே பிரதி மேயர் தெரிவில் போட்டியிடவில்லை’ - கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி விளக்கம்

(ஏ.எல்.எம்.சலீம்)

‘கல்முனை மாநகர தமிழ் மக்கள் மற்றும் தமிழ் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றும், கட்சித் தலைமையின் ஆலோசனையின் பேரிலுமே கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் தெரிவு போட்டியில் பங்குபற்றுவதிலிருந்து தவிர்த்துக் கொண்டதுடன், இத்தெரிவுக்கான விசேட சபை அமர்விலும் பங்குபற்றாது பகிஷ்கரித்தோம்’

இவ்வாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், ரெலோவின் சிரேஷ்ட உப தலைவரும், கல்முனை மாநகர சபையின் கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்துவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய மேயர் ஒருவரைத் தெரிவு செய்வற்கான சபையின் விசேட அமர்வு கடந்த புதன்கிழமை சபை நகர மண்டபத்தில் மேயர் எம்.ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் (தெரிவத்தாட்சி அலுவலராக கொண்டு) பிரதி மேயர் தெரிவு இடம்பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழர் ஒருவர் வகித்துவந்த மேற்படி பிரதி மேயர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் தெரிவாகக் கூடிய வாய்ப்பிருந்தும், மாநகர சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பில் போட்டியிடாமலும், குறித்த சபை அமர்வை அவர்கள் பகிஷ்கரித்தமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றது.

இதற்கு விளக்கமளித்து கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் இந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார். ‘கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் தெரிவின்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்கள் அணிக்கே வாக்களிக்க வேண்டுமென்பதாலும், பிரதி மேயராக தமிழர் ஒருவரே இருந்து வந்த வெற்றிடத்திற்கு மீண்டும் ஒரு தமிழரே பிரதிபலிக்க வேண்டுமென்பதாலும், 13 மாநகர சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யத்தக்க பரம்பலுடன் இங்கு தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் நோக்குடனும் பிரதி மேயர் பதவிக்கு கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதென நாம் ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.

ஆனால் கல்முனை வாழ்த் தமிழ் மக்கள், பிரமுகர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இந்த போட்டியிடும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு எம்மிடம் கோரினர்.

கல்முனை தமிழ் மக்களின் நீண்ட கால தேவைகள், கோரிக்கைகள் இந்த பிரதி மேயர் பதவியை ஏற்பதன் மூலம் மழுங்கடிக்கப்படலாமெனவும், ஆரம்பம் முதல் திடமாக முன்னெடுக்கப்படும் கொள்கை ரீதியான செயற்பாடுகளும் வலுவிழக்கப்படலாமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

எனவேதான் முடிவை மீள் பரிசீலனை செய்தும், கல்முனை மாநகரம் வாழ் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியும், எமது கட்சித் தலைமையின் ஆலோசனையின் பேரிலும் பிரதி மேயர் பதவிக்கு கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதில்லையெனத் தீர்மானித்து, பிரதி மேயர் தெரிவுக்கான விசேட கூட்டத்திலும் பங்குபற்றாது பகிஷ்கரித்தோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment