இலங்கை அரசை சர்வதேசம் ஒருபோதும் தப்பவிடக்கூடாது - ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

இலங்கை அரசை சர்வதேசம் ஒருபோதும் தப்பவிடக்கூடாது - ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் வலியுறுத்து

இலங்கை அரசானது சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசை சர்வதேசம் தப்பவிடக்கூடாது.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரிடமே மேற்படி வலியுறுத்தலை சம்பந்தன் விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.

இலங்கை அரசானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்த காலத்தின்போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்த போதும் அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும், போராட்டம் தமிழ் மக்களினுடையது; எனவே, தமிழ் மக்களின் ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத பிளவுபடாத நாட்டினுள் அதிகாரப் பரவலாக்கல் என்ற நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கை அரசு கொடுத்த இந்த வாக்குறுதிகளை சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும், இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதியானது இலங்கை அரசு இந்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்வதற்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய இரா.சம்பந்தன், விசேடமாக இறுதிக்கட்டப் போரின்போது பாதுகாப்புத் தரப்பினரிடமும் அரச அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மை கண்டறியப்படவேண்டும் கோரிக்கை விடுத்தார்.

அப்படியானவர்கள் காணாமல்போயிருந்தால் அதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

எமது மக்கள் இந்த உண்மையைக் கண்டுகொள்வதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள் என்றும், சர்வதேச சமூகம் இந்தக் கருமத்தில் உறுதியாகச் செயற்பட்டு உண்மையைக் கண்டறிய உதவ முன்வரவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருமங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இதன்போது வாக்குறுதியளித்தனர்.

No comments:

Post a Comment