கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சீனா தன்னாலான அனைத்தையும் செய்துள்ளது - சீனா எமது நாட்டிற்கு பொருளாதார ரீதியில் பல உதவிகளை புரிந்துள்ளது - News View

Breaking

Post Top Ad

Sunday, February 16, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சீனா தன்னாலான அனைத்தையும் செய்துள்ளது - சீனா எமது நாட்டிற்கு பொருளாதார ரீதியில் பல உதவிகளை புரிந்துள்ளது

(ஆர்.விதுஷா) 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் இலங்கையின் உதவிக்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சீன அரசாங்கம் இந்நோயை கட்டுப்படுத்த தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான பிரதி சீன தூதுவர் வூ வைய் தெரிவித்தார். 

சீன மக்கள் இந்த சுகாதரார நெருக்கடியிலிருந்து மீண்டு விரைவில் நலமடைய வேண்டி கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நேற்று சனிக்கிழமை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

இந்த திருப்பலி ஆராதனையில் இலங்கைக்கான பிரதி சீன தூதுவர்வூ வைய், வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 
சீன மொழியில் முதல் வாசகம் மற்றும் மன்றாட்டு ஆகியன ஒப்புக் கொடுக்கப்பட்டமை இந்த திருப்பலி பூஜையின் சிறப்பம்சமாகும். அத்துடன், இந்த திருப்பலியில் கலந்து கொண்ட இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட முக்கயஸ்தர்கள் காணிக்கையையும் ஒப்புக் கொடுத்தனர். 

திருப்பலி ஆராதனைகள் நிறைவடைந்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் வூ வைய் கூறியதாவது, கர்தினால் கூறியதைப்போன்று நாங்கள் அனைவரும் மனித இனத்தை சேர்ந்தவர்கள். அந்த வகையில், இன, மத, பேதங்களுக்கு அப்பால், எமக்கு உதவி கிடைத்துள்ளது. இலங்கையின் உதவிக்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

சீன அரசாங்கம் இந்நோயை கட்டுப்படுத்த தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கை அளித்த உதவிக்காக சீன அரசாங்கம் சார்பில் இத்தருணத்தில் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன். 
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த திருப்பலி பூஜை விசேட விதமாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அந்த நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு வேண்டியே ஒப்புக் கொடுக்கப்பட்டது. 

சீனா எமது நட்பு நாடாகும். அந்த வகையில், ஏனைய நாடுகள் சீனாவிற்கு எதிராக எழுந்த போதிலும் சீனாவுடன் பல ஆண்டு காலமாக நாம் நட்புறவை பேணி வருகின்றோம். 

சீனா மாத்திரமல்லாது அனைது நாடுகளும் வைரஸ் தொற்றின் காரணமாக பாரிய சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 
சில அரசியல் கட்சிகள் இதனை மையமாக கொண்டு இலாபம் ஈட்ட எத்தனிக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சீனர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஏனைய நாடுகள் தடை விதித்துள்ளன. 

அதேபோல் சீன உற்பத்திகளை நிறுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. இது நல்ல விடயமல்ல. சீனா எமது நாட்டிற்கு பொருளாதார ரீதியில் பல உதவிகளை புரிந்த நாடாகும். 

ஆகவே, உலக நாடுகளுடன் இணைந்து இந்த நோய் நிலைமையிலிருந்து நாடு விடுபடுவதற்காக அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டியது அவசியமானதாகும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad