கிழக்கு மக்களை நேசிக்கின்ற அதாவுல்லாவே கிழக்கு மண்ணை ஆள வேண்டும் - முன்னாள் அமைச்சர் சுபையிர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

கிழக்கு மக்களை நேசிக்கின்ற அதாவுல்லாவே கிழக்கு மண்ணை ஆள வேண்டும் - முன்னாள் அமைச்சர் சுபையிர்

(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாணத்தையும் அம்மாகாண மக்களது பிரச்சினைகளையும் நன்கறிந்த ஒருவரே கிழக்கு மாகாணத்தை ஆள வேண்டும். அதற்குப்பொருத்தமான ஒருவர் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா மாத்திரமே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சாய்ந்தமருது மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி மன்றம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உள்ளூராட்சி மன்றத்தினை அம்மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவையே சாரும். இன்று சாய்ந்தமருது மக்களின் நீண்டகாலக் கோரிக்கை தீர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் அம்மக்கள் பாற்சோறு வழங்கி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது மக்களின் தாகத்தினை உணர்ந்து கொண்ட அதாவுல்லா சந்தர்ப்பத்தினை சரியாகப்பயன்படுத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார். கிழக்கிலே வாழும் மக்களுடைய தேவைகளையும் கஷ்டங்களையும் நன்கறிந்தவர். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பினுடைய பாசறையிலே வளக்கப்பட்டவர். அவர் ஓர் சிறந்த ஆளுமையுள்ள அரசியல் தலைவரும் கூட. தூரநோக்கு சிந்தனையுடன், கொள்கை அரசியலைச்செய்து வருபவர். அதனால் அவருக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் நன்மதிப்புள்ளது.

குறிப்பாக, பதவிகளுக்கு சோரம் போகாது சமூகத்தைக் காட்டிக்கொடுக்காத தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவுக்கு சாய்ந்தமருது மக்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். கிழக்கு மக்களுக்கு தலைமை கொடுக்கக்கூடிய ஆளுமை அவரிடமுள்ளது. கிழக்கு மக்களுக்குப் பொருத்தமான தலைவர் யார் என்பதும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அப்பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தினை நாங்களே பெற்றுக்கொடுப்போமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கடந்த காலங்களில் போலி வாக்குறுதிகளை வழங்கி அம்மக்களை ஏமாற்றியுள்ளனர். ஏமாற்று அரசியலைச் செய்தவர்கள் இன்று அந்த மக்களின் உள்ளங்களிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர்.

கடந்த தேர்தல் காலங்களின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவையும் சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து மிக விரைவில் உள்ளூராட்சி மன்றத்தினை வழங்குவோம் என சூழுரைத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்ட அந்தத்தலைவர்கள், நல்லாட்சி அரசாங்கத்தில் உச்ச அதிகாரங்களை தம்வசம் வைத்துக்கொண்ட போதும், தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்காக அவர்கள் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரத்தினை வைத்து அரசியல் வியாபாரம் செய்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அப்பாவி மக்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து, அந்த பிராந்தியத்தில் அமைதியின்மையினை ஏற்படுத்தினர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தைப்பற்றியும் அம்மாகாண மக்களையும் பற்றியும் பூரண தெளிவில்லாத குறித்த தலைவர்கள் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?. அவர்கள் கிழக்கு மக்களை ஏமாற்றியே அரசியல் செய்து வந்துள்ளனர்.

இதனால் குறித்த தலைவர்களுடன் அதிருப்தியுற்ற சாய்ந்தமருது மக்கள் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து பள்ளிவாசலின் கீழ் ஒன்றுபட்டு, போராட்டத்தில் குதித்தனர். அம்மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றத்தினைப் பெறுவதற்காக பட்ட இன்னல்கள், கஷ்டங்கள் ஏராளம். அவற்றை நானும் நன்கறிவேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகள் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க முடியும்.

குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தமிழ் முஸ்லிம் சமூகம் பிரிந்திராத வகையில் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக அப்பிரதேச தமிழ் அரசியல் தலைவர்கள் தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாவுடன் பேச வேண்டும். அவர் எப்போதும் சமூகங்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்பதில் மிகத்தெளிவாக இருப்பவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment