(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஸ்ரீ லாங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் இணைத் தலைமை தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளலாம். வீதியில் செல்பவர்கள் எல்லோரும் இது தொடர்பாக விமர்சனம் செய்துவருவதால் கூட்டுப் பொறுப்புக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என ராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.
கொழும்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருக்கின்றது. அதேபோன்று 17 கட்சிகள் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணி அமைப்பதற்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.
இந்த மூன்று ஒப்பந்தங்களும் மிகவும் தூரநோக்குடன் சிந்தித்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களாகும். ஒப்பந்தம் தொடர்பாக சரியாக தெரியாதவர்களும் வீதியில் செல்பவர்களும் இணைத் தலைமை தொடர்பாக விமர்சன ரீதியில் கருத்துக்களை தெரிவிப்பது எமக்கிடையே இருக்கும் கூட்டுப் பொறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபகஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment