சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் : கயந்த கருணாதிலக்க - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் : கயந்த கருணாதிலக்க

(எம்.மனோசித்ரா) 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சின்னம் சட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

கேள்வி : அரசாங்கத்துக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் காரணமாக உங்களுக்கு வாக்களித்த 56 இலட்சம் மக்களும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர் அல்லவா? 

பதில் : ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியானதாகும். யார் வேண்டுமானாலும் விரும்பிய கருத்துக்களை முன்வைக்க முடியும். முன்வைக்கப்படும் சகல கருத்துக்களையும் செவிமடுக்க கட்சி தயாராக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறு பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்வினை எடுத்தோம். வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதையே முரண்பாடுகள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். 

நாம் எதிர்க்கட்சியான பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் போது அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக ஏகமனதாக தெரிவு செய்தோம். அதேவேளை பொதுத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்ததோடு, வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தையும் அனைவரும் ஒருமித்து வழங்கியிருக்கின்றோம். 

இந்த கூட்டணியின் பொதுத் தேர்தலில் வெற்றி பெருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம். பொதுத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சின்னம் சட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment