ஒரு இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுப் போயுள்ளதாக பொய் முறைப்பாடு செய்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய சம்பவம் மட்டக்களப்பு ஊறனி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
சின்ன ஊறணி பிரதேசத்தில் கடந்த 29 ஆம் திகதி குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் வீட்டுக்கு முன்னாள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பாகங்களை கழற்றியதுடன் மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்து முச்சக்கர வண்டியில் உள்ள டேஸ்போட்டை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபா பணம் திருட்டு போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் பணம் எங்கிருந்து வந்தது என ஆராய்ந்தபோது சீட்டு பணம் என தெரிவித்ததையடுத்து குறித்த சீட்டு நடாத்தி வருபவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தான் இன்னமும் சீட்டு பணம் வழங்கவில்லை எனவும் பொலிசார் வந்து கேட்டால் பணம் கொடுத்ததாக பொய் சொல்லுமாறு அவர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து முறைப்பாட்டாளரை பொலிசார் கைது செய்தபோது இரண்டாயிரத்து 500 ரூபாதான் திருட்டு போனதாகவும் பொலிசாரை தீவிரப்படுத்த இவ்வாறு ஒரு இலட்சம் ரூபா திருட்டுப்போனதாக பொய்முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதவான் விடுவித்துள்ளார்.
No comments:
Post a Comment