காத்தான்குடி நகைக் கொள்ளை - நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர் ​கொழும்பில் கைது, உருக்கிய நிலையில் தங்கம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

காத்தான்குடி நகைக் கொள்ளை - நகைக்கடை உரிமையாளர் உட்பட இருவர் ​கொழும்பில் கைது, உருக்கிய நிலையில் தங்கம் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் கொழும்பு புறக்கோட்டையில் மறைந்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொடுத்த தகவலின் பேரில் கொழும்பு வௌ்ளவத்தையிலுள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் 16 பவுண் தங்கம் கையடக்க தொலைபேசி உட்பட ஆணைங்கள் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

கடந்த மாதம் 4 ஆம் திகதி காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து 55000 ரூபாய் பணம் 23 பவுண் தங்கம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயரட்ணவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந் நயணசிறியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட் எஸ்.அமித (21580), பொலிஸ் உத்தியோகத்தர்களான எம்.முஆசிர் (5867), எஸ்.எம்.முகமட் (79586) ஆகிய பொலிஸ் குழுவினர் பிரதான சந்தேக நபர் புறக்கோட்டையில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று மாலை கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர் வழங்கிய தகவலின் பேரில் கொள்ளையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்த வெள்ளவத்தை நகைக் கடையிலிருந்து 16 பவுண் எடைகொண்ட உருக்கிய தங்கம் மீட்கப்பட்டு கடை உரிமையாளரும் கைதானார்.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment