இலங்கை - மியன்மார் ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படுகின்ற இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வ உறவுகள் மேலும் விரிவடைந்து இரண்டு நாடுகளின் பிரஜைகளும் பலனடையும் வகையில் அவை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் மற்றம் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், மக்களின் பொருளாதார நிலையினை உயர்த்துவதனை பொருளாதார இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம், நட்பு நாடுகள் பிராந்திய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆர்வமுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தினையோட்டி கொழும்பில் உள்ள மியன்மார் உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று (12.01.2020) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'இரண்டு நாடுகளுக்கும் இடையில் கலாச்சாரம், மதம் மற்றம் வர்த்தக ரீதியான தொடர்பானது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. இலங்ககையின் கட்டிடக் கலையில் கூட மியன்மார் நாட்டின் கட்டிடக் கலை அம்சங்களின் தாக்கம் இருப்பதை இன்றும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அந்தளவிற்கு வரலாற்று ரீதியான தொடர்புகளையும் நல்லுறவினையும் கொண்டுள்ள மியன்மார் நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்ற நிலையில், இராஜதந்திர ரீதியான உறவுகள் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்டது. அந்த வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவு 70 ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்தக் காலப்பகுதியில் இருண்டு நாடுகளின் நலன்களுக்கும் தேவையான வகையில் தேவையான தளங்களில் இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்புக்கள் பரிமாறப்பட்டு வருவதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு இலங்கை - மியன்மார் ஆகிய நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் இரு நாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக இரண்டு நாடுகளுகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான புதிய வழி ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு நாடுகளும் கடந்த ஆண்டுகளில் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளன.
கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி ஆகிய இலங்கையின் முக்கிய இரண்டு வங்கிகளும் அதேபோன்று எல்.ஓ.எல்.சி எனப்படும் நிதி நிறுவனமும் தங்களுடைய கிளைகளை மியன்மாரில் நிறுவியுள்ளன. இந்த சூழல் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் கூடிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதுமட்டுமன்றி இரண்டு நாடுகளுக்குமிடையில் கல்வி ரீதியான ஒத்துழைப்புக்களும் இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாகப் பரிமாறப்படுவதை பெருமையுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இலங்கையின் உயர் கல்வி நிறுவனங்கள் பலவற்றில் மியன்மார் மாணவர்கள் பலர் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மியன்மார் உயர் கல்வி நிறுவனங்களில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இது இரண்டு நாடுகளுகளினதும் புலமையாளர்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தி வருகின்றது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற நீண்ட நல்லுறவானது, சர்வதேச அமைப்புக்களிலும், சர்வதேச தளங்களிலும் இரண்டு நாடுகளினதும் நலன்களை உறுதிப்படுத்ததற்கு பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கி வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment