வடக்கு வீதி போக்குவரத்து, பாதுகாப்பு தொடர்பில் உரிய திணைக்களங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் - ஆளுநர் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

வடக்கு வீதி போக்குவரத்து, பாதுகாப்பு தொடர்பில் உரிய திணைக்களங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் - ஆளுநர் வலியுறுத்தல்

வட மாகாண வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அந்த பிரதேச வீதி போக்குவரத்துடன் தொடர்புபட்ட உரிய திணைக்களங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் ஏற்படுகின்ற வீதி விபத்துகள் தொடர்பாகவும், வீதி விபத்துக்களைக் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆளுநருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கலந்துரையாடலில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரிகள், மருத்துவர்கள், பொலீஸ் உயர் அதிகாரிகள், வீதிப் பாதுகாப்பு பொலீஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் வட மாகாண வீதிப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ரீ.கோபிசங்கர் அவருடைய ஆய்வறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டது. நகருக்குள் அனுமதி வழங்கப்படாத கடைகள் அகற்றப்படுவதற்கும் பல்வேறு தேவைகளுக்காக வரும் வாகனங்களுக்கான பொதுவான தரிப்பிட வசதிகள் நகருக்கு வெளியே அமைப்பது தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டது.

கலந்துரையாடலின் போது, முச்சக்கரவண்டி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன. குறிப்பாக சகல முச்சக்கரவண்டிகளுக்கும் மீற்றர் பொருத்தப்பட வேண்டும். முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முச்சக்கரவண்டி தரிப்பிட வசதிகள் பெறுவதிலும், வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களை புதிப்பிக்க முனைக்கின்ற போதும் மற்றும் இதர உத்தியோக பூர்வ முயற்சிகளின் போதும் உரிய திணைக்களகங்களில் இருந்து அவர்கள் தொடர்பிலே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. விபத்துக்கள் தொடர்பாகவும் காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துவரும் போது கையாள வேண்டிய முதலுதவி நடைமுறைகள் தொடர்பாகவும், இவர்களுக்கான முதலுதவி மற்றும் போதிய பயிற்சியும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேற்படி முடிவுகளை முச்சக்கரவண்டி சங்கத்தின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர்.

வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள், மற்றும் நாய்களின் நடமாட்டத்தை முற்றாக நிறுத்துவது தொடர்பில் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதன் போது தனியாருக்கு சொந்தமான அடையாளம் காணப்பட்ட சில காப்பகங்களில் அவற்றை சேர்பதற்கான முயற்சிகள் தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இவை தொடர்பிலே சம்பந்தப்பட்ட திணைக்களகங்கள் அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பாடசாலை மட்டங்களில் விபத்துக்கள் தொடர்பிலும் வீதிப் பாதுகாப்பு தொடர்பிலும் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பாடசாலைகளில் இருக்கும் வீதிப்பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தேவையான உபகரண வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலைக்கு வரும் மாணவர்களை ஏற்றி, இறக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பிரதான போக்குவரத்து வீதிகளின் இருமருங்கிலும் பற்றைகள் காணப்படுவதை சுட்டிக்காட்டிய ஆளுநர் சகல பிரதான வீதிகளின் இருமருங்கிலும் அவ்வாறான பற்றைகளை அகற்றுவது தொடர்பிலும் வீதிப் போக்குவரத்திற்கான சமிஞ்ஞைகள், அறிவுறுத்தல் பலகைகள் அவசியமான மற்றும் பொருத்தமான இடங்களில் தாமதம் இன்றி அமைக்கப்பட வேண்டும் என்று உரிய திணைக்களகங்களுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததோடு இவற்றுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொலீஸ் திணைக்களகத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உரிய திணைக்களகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் நின்றபடி பயணிக்கும் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பிலே தன்னுடைய கவனத்தில் கொண்டுவரப்பட்டதை நினைவுபடுத்திய ஆளுநர், தனியார் பேரூந்து சங்கத்தின் உரிமையாளர்கள், பொலீஸ் அதிகாரிகள் மற்றும் தொடர்புபட்ட அதிகாரிகள் இவை தொடர்பில் உடனடியாக கவனம் எடுக்கும்படி அறிவுறுத்தியதோடு தனியார் பேரூந்து உரிமையாளருக்கு ஏற்றவாறும் பயணிகளுக்கு ஏற்றவாறும் நேர அட்வனைகளை ஒழுங்குபடுத்தி அல்லது மேம்படுத்தி போக்குவரத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்புடைய வழிவகைகளை தாமதம் இன்றி செயற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்த போது, இந்த கூட்டத்திலே கலந்து கொண்ட தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர்கள், உரிமையாளர்கள், பொலீஸ் திணைக்களக அதிகாரிகள், உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதே வேளை போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் தொடர்பிலே பாரபட்சம் இன்றி அமுலில் உள்ள சட்டங்களை கடுமையாக பிரயோகிக்கும்படி பொலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கண்காணித்து வடக்கு மாகாண ஆளுநருடைய ஏற்பாட்டிற்கு இணங்க மக்களுக்கான சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக துறைசார் நிபுனர்களைக் கொண்ட பணிக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பிலும் முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment