கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ள சர்வதேச சுகாதார அவசர கால நிலைமையைக் கருத்திற்கொண்டு விமான நிலையத்தில் உயர் தொழில்நுட்பத்துடன் அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சீனாவின் பயணிகள் மாத்திரமல்ல இலங்கைக்குவரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் பரிசோதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இராணுவத்தினர் மற்றும் விமானப் படையின் அர்ப்பணிப்புடன் கொரோனா வைரஸ் இலங்கையை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
விமானப் படையின் CBRN பிரிவு வுஹானிலிருந்து மாணவர்களை அழைத்துவந்து தற்போது தியத்தலாவையில் அவர்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. இவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளனர்.
ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதியான சீனப் பெண்ணுக்குத் தாக்கியிருந்த கொரோனா வைரஸ் முற்றாக நீங்கியுள்ளது. இன்று அல்லது நாளை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற முடியும். இலங்கையில் 99.99 சதவீதம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலை உட்பட ஏனைய வைத்தியசாலைகளில் 16 பேர் சந்தேகத்தின் பேரில் அனுமதியாகியுள்ளனர். இதுவரை 20 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறித்த சீன பெண்ணைத் தவிர வேறு எவருக்கும் பாதிப்பு இல்லை.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சுகாதார அவசரகால நிலைமையையடுத்து இலங்கையில் நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுவாக்கியுள்ளோம்.
குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிதீவிர பாதுகாப்பு உயரிய தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குவரும் சீன பயணிகள் மாத்திரமல்ல அனைத்துப் பயணிகளையும் காண்காணிக்கவும் பரிசோதிக்கவும் உயர் தொழில்நுட்பங்கள் கையாளப்படுகிறது.
அதேபோன்று நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகள் உள்நுழைந்த பின்னர் 14 நாட்களுக்கு அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அதற்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பயன்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், விமான நிலையத்தில் மேலும் சில சூட்சுமமான பாதுகாப்பு பொறிமுறைகளை வகுத்துள்ளோம். விமானப் படையின் விசேட வைத்திய நிபுணர் ஹேரத் தலைமையிலான குழுவொன்று உள்ளதுடன், இச்செயற்பாடுகளைத் தினம் தினம் மதிப்பீடு செய்ய குடிவரவு குடியகல்வு திணைக்களம், விமானப் படை மற்றும் சுகாதார அமைச்சின் மூவர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், இலங்கையில் பணிபுரியும் இருபதாயிரம் வரையான சீனர்களுக்கு விசேட ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்கள் தொழில் புரியும் தளம் மற்றும் வசிக்கும் இடத்துக்கு வெளியில் செல்ல வேண்டாமெனப் பணிக்கப்பட்டுள்ளது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment