வுகானில் வீடுகளை சோதனையிட்டு நோயாளிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - மருத்துவர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

வுகானில் வீடுகளை சோதனையிட்டு நோயாளிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - மருத்துவர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள வுகான் நகரின் வீடுகளை சோதனையிடும் அதிகாரிகள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என சந்தேகிக்கப்படுபவர்களை சுற்றிவளைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சீனாவின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் எவரும் கட்டாய மருத்துவ பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ள சீன அரச ஊடகம் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என கருதப்படுபவரும் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளது. 

நகரின் எட்டு பிரதேசங்களில் 10 தற்காலிக தடுப்பு நிலையங்களை அதிகாரிகள் உருவாக்கவுள்ளனர் என வுகானின் சுட்டியான் நாளேடு தெரிவித்துள்ளது. 

சிறிதளவு அறிகுறி உள்ளவர்கள் கூட இந்த தடுப்பு நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள் என சுட்டியான் தெரிவித்துள்ளது. 

தொழிற்சாலைகளில் உள்ள கட்டிடங்கள், கைத்தொழில் பேட்டைகள், போக்குவரத்து நிலையங்கள் போன்றவை தற்காலிக தடுப்பு நிலையங்களாக மாற்றப்படுகின்றன. 

இதேவேளை வுகானின் அனைத்து சமூகங்களும் கிராமங்களும் அதிகாரிகளின் 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அந்த சமூகங்கள் கிராமங்களின் வெளி உலக தொடர்பு முற்றாக துண்டிக்கப்படும். 
இதேவேளை இன்று முதல் இருமல் மருந்தினை கொள்வளவு செய்பவர்கள் அல்லது மருத்துவ கிசிச்சை பெறுபவர்கள் தங்கள் அடையாள அட்டையினை பெற வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

இதேவேளை காய்ச்சல் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து உள்ளுர் குழுக்களிற்கு அறிவிக்க வேண்டும் அல்லது நோய்வாய்ப்பட்டால் தனிமைப்படுத்தலிற்கு தங்களை உட்படுத்த வேண்டும் என்ற கட்டாய நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் கட்டாய நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்படுவார்கள் என வுகான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

பாதிப்பு குறித்து தெரிவிப்பதை தாமதிப்பவர்கள் அல்லது வதந்திகளை பரப்புபவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் வுகான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இதேவேளை வுகான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு வீடுகளை கதவுகளை தட்டி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை வைரசினால் பாதிக்கப்பட்ட வுகானின் பிரபல மருத்துவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். வுகான் வுச்சாங் மருத்துவமனையை சேர்ந்த லியு ஜிம்மிங் என்ற மருத்துவரே இன்று உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment