ஏப்ரல் 21 தாக்குதல் : கைதான இருவருக்கு பிணை, 59 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 25, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் : கைதான இருவருக்கு பிணை, 59 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், மேலும் 59 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (25) ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், ஏனைய 59 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களும் தலா இரண்டு சரீரப்பிணைகளிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண், சாய்ந்தமருதில் கடந்த வருடம் ஏப்ரல் 26 அன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின்போது உயிரிழந்த ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முஹம்மது நியாஸ் என்பவரின் மனைவி என தெரிய வருகின்றது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வழக்குக்காக நீதிமன்றம் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களின் பிணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டதுடன் நீதிமன்றத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

(புதிய காத்தான்குடி நிருபர்)

No comments:

Post a Comment