சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் கறுப்புப்பட்டியலுக்குள் இருப்பினும் கடன் பெற்றுக் கொள்ள முடியும் - கடந்த அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சிக்கல்களே பிரதான காரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் கறுப்புப்பட்டியலுக்குள் இருப்பினும் கடன் பெற்றுக் கொள்ள முடியும் - கடந்த அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சிக்கல்களே பிரதான காரணம்

கடன் தரவுகள் பணியகத்தின் தரவுகளில் கடன்களை பெற்றுக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டியலுக்குள் இருப்பினும் அவர்களால் சிக்கலின்றி மீண்டும் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வங்கிகள் கடன் வழங்கல்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இலங்கை கடன் தரவுகளின் பணியகத்தின் செயற்பாடுகள் மற்றும் நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செயலமர்வொன்று நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் பெற்றுக் கொண்டுள்ளோர் தொடர்பில் இலங்கை கடன் தரவுகள் பணியகத்தின் தரவுகளில் உள்ளமையானது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் முகங்கொடுக்கும் சவாலான ஒரு விடயமாகும். இதனால் அவர்களால் மீண்டும் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாது.

குறிப்பாக அரசாங்கம் வழங்கியுள்ள கடன் சலுகைகளை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலைமை காணப்படுகிறது. அதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரது ஆலோசனையின் பிரகாரம் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை உரிய வகையில் செலுத்த முடியாமல் போனமைக்கு அவர்கள் மாத்திரம் காரணமல்ல. 2015ஆம் ஆண்டு முதல் 2019 இறுதி வரை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சிக்கல்களே பிரதான காரணமாகும்.

சமூகத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கருத்தாடல்கள் இடம்பெற்றமையால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை மீண்டும் எழுச்சியடையச் செய்ய அரசாங்கம் வரி சலுகை மற்றும் நிதி சலுகைகளை வழங்கியுள்ளது. என்றாலும் கடன்களை பெற்றுக் கொள்வதில் வர்த்தகர்களுக்கு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடன் தரவுகள் பணியகத்தின் தரவுகளில் கடன் பெற்றுக் கொண்டோரின் பெயர்கள் உள்ளன. அதனால் அவர்களால் மீண்டும் கடனைப் பெற்றுக் கொள்ள முடியாது. என்றாலும், அவர்கள் தடைகளின்றி கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment