கொரொனா வைரஸ் தொடர்பிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகவும் நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுகாதாரம் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவிடம் தெரிவித்ததாக குழுவின் தலைவரும் நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் சமூக நலன்புரி சமூக வலுவூட்டல் துறைசார் பாராளுமன்ற மேற்பார்வை குழு இன்று (30) பாராளுமன்ற குழு அறையில் (இல7) குழுவின் தலைவர் மயில்வாகனம் திலகராஜ் (பா.உ) தலைமையில் கூடியது.
இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி. பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க, அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அத்தநாயக்க, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டா, வைத்திய ஆலோசகரும் வைரஸ்கள் தொடர்பான நிபுணருமான ஜூட் ஐயமஹா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தின்போது கொரொனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கை, அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை தவிர்த்து ஒன்பது மாகாணங்களிலும் குறைந்தபட்சம் ஒரு வைத்தியசாலையை தயார் நிலையில் வைத்திருத்தல், விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல் தேவையான மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்தல் முதலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அதேநேரம் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களை கண்காணிக்கும் வைத்தியர்கள், மருத்துவ ஆளணியினர், சிற்றூழியர்களின் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலதிக இயந்திர உபகரணங்களின் தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
ஊடகங்கள் பொறுப்புடன் செயலாற்றுவதன் தேவை குறித்தும் நாட்டுக்குள் வரும் சந்தேகத்துக்கிடமான பயணிகளின் நடமாட்டம் குறித்து அறியும் ஏற்பாடுகளும் கலந்துரையாடப்பட்டன.
முகக் கவசம் அணிவது தொடர்பாக யாரும் சுயாதீனமான முடிவெடுக்கலாம் எனவும், அது மட்டுமே வைரஸ் பரவுவதை தடுக்கும் ஏற்பாடு அல்ல என்ற வகையில் அதனையும் தாண்டிய பல விடயங்கள் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய கூட்டத்தை அடுத்து முறையான கூட்டக் குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உயரிய சபையான பாராளுமன்றம் கோருமிடத்து இது தொடர்பான அறிக்கை ஒன்றை வழங்குவதற்கு சுகாதாரம் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழு தயார் நிலையில் உள்ளதாகவும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment