கீழ்த்தரமான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் முழு அரசியலுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த ஆட்சியில் இருந்த சிலரது செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றம் குறித்த மக்களின் நம்பிக்கையும் நீதித்துறை சுயாதீனம் பற்றிய நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
களுத்துறை தர்மவிஜயபிரிவேனவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் மஹிந்த ராஜபகஷ அவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் பேஸ்புக்கை பார்த்து இது தொடர்பில் அறிந்துகொள்ளலாம். தகுதியில்லாதவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதால் முழு அரசியலுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரையுள்ள சகலரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதாகக் கூறி தீர்ப்புகளை மாற்றுவது கடந்த அரசின் கொள்கையாக இருந்தது. சிலரின் செயற்பாட்டினால் நீதிமன்றம் குறித்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இழந்த கௌரவத்தை மீளக் கட்டியெழுப்புவது பிரதம நீதியரசரின் பொறுப்பாகும். இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதனூடாக நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் காட்டுச் சட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால் நாளாந்தம் நாடு அழிவுப்பாதையிலேயே செல்லும். குரல் பதிவுகள் வெளியான பின்னரே இவ்வாறு நடந்திருப்பது வெளியில் தெரியவந்துள்ளது.
ஏதாவது தேவைக்கு நீதிபதியை நாம் சந்திப்பதானால் சட்டத்தரணியுடனே செல்ல வேண்டும். அதுதான் சம்பிரதாயமாகும். தனியாகச் சென்று நீதிபதியை சந்திக்க முடியாது.
இவ்வாறு சில தீர்ப்புகளுக்காக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்ததால்தான் எனது மகன் 46 நாட்கள் விளக்கமறியலில் இருந்ததுடன், சில எம்.பிக்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த நிலைமை மாற வேண்டும். நாம் ஒரு போதும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் மேற்கொள்ளவில்லை. அதன் பாரதூரத்தை நாம் அறிந்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment