நீதிபதிகள் எத்தனை பேர் பட்டியலில் உள்ளனர் என்று தெரியாது, 10 குழுக்களினூடாக விசாரணைகள் முன்னெடுப்பு, பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறோம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

நீதிபதிகள் எத்தனை பேர் பட்டியலில் உள்ளனர் என்று தெரியாது, 10 குழுக்களினூடாக விசாரணைகள் முன்னெடுப்பு, பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறோம்

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளில் நீதிமன்றம் தொடர்பில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பாரென நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​தெரிவித்தார்.

இந்தக் குரல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படாதிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பிரதானிகளை சந்தித்தார். இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குரல் பதிவு தொடர்பில் 10 குழுக்களினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் முடிவுகளுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குரல் பதிவு விவகாரத்தை ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொடர்புள்ள சம்பவமாக மாத்திரம் மட்டுப்படுத்தாது இதனுடன் தொடர்புள்ள ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நீதிபதிகளுடன் உரையாடி குறித்த நபருக்கு தூக்குத் தண்டனை வழங்குமாறு கூறுபவர் மட்டுமன்றி அந்தத் தண்டனை விதித்தவரும் தவறு செய்துள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றிருப்பது இதனூடாக தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தலையிட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர். இது பாரதூரமான விடயம் என்றார்.

விசாரணை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் எத்தனை பேர் பட்டியலில் உள்ளனர் என்று தெரியாது. ஒரு இலட்சத்திற்கு அதிகமான குரல் பதிவுகள் உள்ளன. பொலிஸ் குழு விசாரணை நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எத்தனை பேர் இவ்வாறு பேசியுள்ளனர் என என்னிடம் கேட்கின்றனர். இந்த சந்தேகம் முழு நாட்டிற்கும் இருக்கிறது. 

பிரதம நீதியரசர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டிற்கு சென்று நீதிபதி ஒருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நீதித்துறை மீதான கௌரவம் நம்பிக்கை என்பவற்றை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment